| ADDED : மே 30, 2024 03:49 AM
மேலுார்: மேலுாரில் வினியோகிக்கப்படும் காவிரி கூட்டு குடிநீர், பல மாதங்களாக ரோட்டில் பாய்ந்து வீணாகிறது என புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என நகராட்சி மீது புகார் எழுந்துள்ளது.திருச்சி, குளித்தலை காவிரி ஆற்றில் ஆழ்குழாய் அமைத்து ரூ. 784 கோடி செலவு செய்து மேலுார் காந்திஜி பூங்காவிற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.இங்கிருந்து பிறபகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. சிவன் கோயில் எதிரே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவுள்ள தொட்டியில் தண்ணீரை ஏற்றி, இரும்பு குழாய்கள் மூலம் வார்டு 16, 18 உள்பட பல பகுதிகளுக்கும் வினியோகிக்கின்றனர். இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாகிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: காவிரி குடிநீர் சப்ளை செய்வதாக கூறி தெருக்குழாய்கள் அனைத்தும் நகராட்சி சார்பில் துண்டிக்கப்பட்டது. பிறகு வீட்டு உரிமையாளர்கள் நகராட்சியில் பணம் செலுத்தி வீட்டுக்குழாய் இணைப்பு பெற்றனர். இதற்கு நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 1,440 செலுத்துகின்றனர். குடிநீர் வடிகால் வாரியத்திடம் நகராட்சி நிர்வாகம் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.16 க்கு வாங்குகிறது. அது ரோட்டில் வெளியேறுவதால் மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது.நகராட்சி நிர்வாகம் முறையான பராமரிப்பு செய்யாததால் உடைப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக தண்ணீர் வீணாகிறது. இதனால் பொது மக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ. 30க்கு விலைக்கு வாங்குகின்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. குடிநீருக்காக நகராட்சிக்கு கட்டணம் செலுத்துவதுடன், வெளியிலும் விலைக்கு வாங்கி நஷ்டப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்ய வேண்டும் என்றனர்.நகராட்சி கமிஷ்னர் கணேசன் கூறுகையில், குழாய் உடைப்பு உடனடியாக சரி செய்யப்படும் என்றார்.