| ADDED : மே 31, 2024 05:34 AM
மேலுார்: பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசை கண்டித்து முல்லைப் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய, வர்த்தக சங்கத்தினர் கலந்து கொண்டனர்.சங்கத் தலைவர் முருகன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு பொய் பிரசாரம் செய்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அணையை இடித்து விட்டு புதிய அணையை கட்ட முயற்சிக்கிறது.அணை கட்டினால் ஒரு போக பாசனத்தை நம்பி உள்ள 86 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகும். மதுரை, திண்டுக்கல் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு அனுமதி கேட்டு கொடுத்த மனுவை ரத்து செய்ய வேண்டும்.கேரள அரசு அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். தொடர்ந்தால் கடையடைப்பு, ஊர்வலம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவோம். அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால், துணைச் செயலாளர் அசோக்குமார். குறிஞ்சிகுமரன், ஸ்டாலின், வணிகர் முன்னேற்ற சங்கத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், நகை, அடகு கடை சங்க நிர்வாகிகள் செல்வராஜ், சுரேஷ். முரளி, காய்கறி மார்கெட் சங்கத் தலைவர் மணவாளன், விவசாய சங்க நிர்வாகி சேவுகமூர்த்தி பங்கேற்றனர்.