உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெப்பத்தில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள்

வெப்பத்தில் இருந்து தப்பிக்க உதவும் உணவுகள்

திருப்பரங்குன்றம்: கோடை வெப்பத்தை சமாளித்து உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாப்பாக வைத்துக்கொள்ளது என்பது குறித்து மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை தலைவர் கோபிமணிவண்ணன் தெரிவித்ததாவது:உணவு கெடாமல் பாதுகாக்க சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள், சுவையூட்டிகள் மற்றும் செயற்கை வண்ணங்கள் கோடையில் மட்டுமல்ல எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டியவை. இவையே நோய்களுக்கு காரணிகளாகும்.இதை தவிர்க்க இளநீர், பதநீர், நுங்கு, நீரும், மோரும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் கோடை காலத்தில் உடல் சோர்வு ஏற்படாமல் ஆரோக்கியம் காக்கப்படும். நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சவ்சவ், கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் வகைகள் சமையலில் அதிகம் பயன்படுத்தலாம். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, கொய்யா மற்றும் கீரை வகைகளில் உயிர் சத்துக்களும், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்து, தாது உப்பும் அதிக அளவில் இருப்பதால் தினமும் சாப்பிடுவது அவசியம்.கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவுகளை உட்கொள்வதால் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்கிறது. இவை எளிதில் ஜீரணமாவதுடன் நச்சு கலப்பு இல்லாத உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றன. காலை, மாலை குளிர்ந்த நீரில் குளிக்கலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். கால நிலைக்கு ஏற்ப உணவுகளை தேவையான அளவு மட்டும் சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு மருந்து என்பது தேவைப்படாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை