| ADDED : மே 31, 2024 05:58 AM
மதுரை : மதுரை நகரில் பணிபுரியும் போலீசார், அமைச்சு பணியாளர்கள் தங்களுக்கான ஈட்டிய விடுப்பில் செல்ல தகுந்த காரணங்களை கூறி அதற்கான ஆவணங்களை காட்ட வேண்டும் என்ற உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் 'போலீசாரின் பணிச்சுமை, மனஅழுத்தத்தை குறைக்க வாரம் ஒரு நாள் ஓய்வு' என அறிவிக்கப்பட்டது. அதற்கான உத்தரவு பெயரளவிலேயே உள்ளது. போலீசாருக்கு ஆண்டுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு உண்டு. பணி காரணமாக அந்த விடுப்பை எடுக்காதபட்சத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் அதற்குரிய தொகை வழங்கப்பட்டது. போலீசாருக்கு பயனுள்ளதாக இருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் கொரோனா காலத்தில் நிதிச்சுமையை காரணம் காட்டி அந்த சலுகை ரத்து செய்யப்பட்டது. இதனால் ஈட்டிய விடுப்பை கட்டாயம் எடுக்க வேண்டிய நிலையில் போலீசார் உள்ளனர்.இந்நிலையில் அந்த விடுப்பை எடுக்க உரிய காரணங்களை கூறுவதோடு ஆவணங்களையும் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படுவர் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் கூறியதாவது: எங்களுக்குரிய விடுப்பை எடுக்க அதற்கான 'CLAPP' செயலியில் பதிவு செய்தாலே போதும். அதில் என்ன காரணத்திற்காக விடுப்பு எடுக்கிறோம் என்பதை தெரியப்படுத்தும் வசதி உள்ளது. நாங்கள் விண்ணப்பித்ததை பொறுப்பு அதிகாரி முதல் உயர் அதிகாரிகள் வரை பார்க்கலாம். இதுதான் இதுவரை நடைமுறையில் உள்ளது.தற்போது எந்த காரணத்திற்காக விடுப்பு எடுக்கிறோம் என்பதை கூறுவதோடு, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்கிறார்கள். தனிப்பட்ட காரணங்களுக்காக செல்லும்போது அதை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மருத்துவ காரணங்கள் என்றால் மட்டும் அதற்குரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். செயலி வழியாக விடுப்பு கேட்டு விண்ணப்பித்தால் நாளடைவில் தங்களை போலீசார் மதிக்க மாட்டார்கள், சொற்படி கேட்க மாட்டார்கள் எனக்கருதியும், தங்களை நேரில் சந்தித்து 'சல்யூட்' அடித்து மரியாதை செலுத்திவிட்டு விடுப்பு கேட்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அதன் வெளிப்பாடாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர்.