| ADDED : மே 26, 2024 04:27 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி தாலுகாவில் கால்நடை வளர்ப்போர் மற்றும் முகாமிட்டுள்ள கிடை மாடுகளின் உரிமையாளர்கள் சமீபத்திய மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இத்தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை பணிகள் கடந்த மார்ச்சில் முடிந்தது. இதைதொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிடை மாடுகள் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுார் பகுதி வயல்களில் மண் வளத்திற்காக கிடை அமர்த்தப்பட்டுள்ளன.அறுவடை வயலில் அடித்தாள் மற்றும் இரைகளை தேடி மாடுகள் பல கி.மீ., அழைத்து செல்லப்பட்டன. சுட்டெரித்த கோடை வெயிலால் புல், செடிகள் கருகின. நீர் நிலைகளும் வற்ற துவங்கியது. சில பகுதியில் கிணற்று நீரை வயலில் பாய்ச்சி கிடைமாடுகளுக்கு தரும் நிலை வந்தது. இந்நிலையில் சமீபத்திய மழையால் மேய்ச்சல் மற்றும் தரிசு நிலங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன. பசுந்தீவனங்கள் வளர்ந்துள்ளதால் கால்நடைகளும், உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.