மதுரை: மடீட்சியா மற்றும் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் சார்பில் மதுரை மடீட்சியாவில் ஆயுஷ் 2024 பாரம்பரிய மருத்துவ கண்காட்சியை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.இதுதொடர்பான கருத்தரங்கில் மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன் வரவேற்றார். தன்வந்தரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலை இயக்குநர் பிரேம்வேல் வழிகாட்டி மலரை வெளியிட்டார். கண்காட்சி தலைவர் ராஜமுருகன், துணைத்தலைவர் டாக்டர் ஜெயவெங்கடேஷ், மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன், பொருளாளர் பன்சிதர் கலந்து கொண்டனர். கண்காட்சி, விற்பனை
மேட்டூர் சித்த மருத்துவ மூலிகை தோட்டம் சார்பில் சந்தனம், சர்பகந்தி உட்பட 190 வகையான மூலிகை தாவரங்கள், 110 வகையான மூலப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மூலிகைச் செடிகள் சலுகை விலையில் விற்கப்படுகிறது. இங்குள்ள ஸ்டால்களில் ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதிக்கான இலவச சிகிச்சையுடன் மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. கருத்தரங்கு
இன்று (ஜூன் 22) காலை 11:30 மணிக்கு வீட்டுத்தோட்டத்திற்கு ஏற்ற மூலிகைகள் குறித்து சித்த மருத்துவ மூலிகை தோட்ட ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் ராதா, மதியம் 2:30 மணிக்கு சமையலறையில் சித்த மருத்துவம் குறித்து சித்த மருத்துவ கள நிபுணர் டாக்டர் குமார் பேசுகின்றனர். நாளை (ஜூன் 23) காலை 11:00 மணிக்கு ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருந்து நிறுவனங்கள் வளர்ச்சி மற்றும் லைசென்ஸ் பெறும் முறை குறித்து மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் டாக்டர் மானக்சா, மதியம் 12:30 மணிக்கு உள்ளம் முதல் இல்லம் வரை சித்த மருத்துவம் குறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவன பேராசிரியர் மாரியப்பன் பேச உள்ளனர். இன்றும் நாளையும் (ஜூன் 22, 23) காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை கண்காட்சி நடக்கிறது, அனுமதி இலவசம்.