| ADDED : ஜூலை 02, 2024 06:14 AM
மதுரை: சுகாதார ஆய்வாளர் பணிக்கு ஒரே மாதிரியான கல்வித் தகுதியை நிர்ணயிக்க விதிகளில் திருத்தம் செய்ய தாக்கலான வழக்கின் விசாரணையை தனி நீதிபதிக்கு மாற்றி இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.மதுரை கபிலன் தாக்கல் செய்த பொதுநல மனு:பொது சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிகிறேன். அதற்குரிய சான்றிதழ் பட்டயப்படிப்பு முடித்துள்ளேன். மாநகராட்சி, நகராட்சிகளில் 356 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப பிப்.,9 ல் அறிவிப்பு வெளியானது. பி.எஸ்.சி.,(அறிவியல்), சுகாதார ஆய்வாளருக்குரிய சான்றிதழ் படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யவில்லை.கல்வித் தகுதி நிர்ணயம் மூலம் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்ற 8000 சுகாதார ஆய்வாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். சுகாதார ஆய்வாளர் பணிக்கு ஒரே மாதிரியான கல்வித் தகுதியை நிர்ணயிக்க ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: இது பொதுநல வழக்கல்ல. பணியாளர் தொடர்பான வழக்கு. அதை விசாரிக்கும் தனி நீதிபதிக்கு இவ்வழக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.