உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய்களை நிரப்பும் கழிவு நீர்; குமுறும் குன்றத்து விவசாயிகள்

கண்மாய்களை நிரப்பும் கழிவு நீர்; குமுறும் குன்றத்து விவசாயிகள்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம், திருநகர் பகுதி கழிவுநீர் கண்மாய்களில் கலப்பதால், துர்நாற்ற தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வைகை அணை தண்ணீர் நிலையூர் கால்வாய் வழியாக நிலையூர் பெரிய கண்மாய், சேமட்டான், குறுக்கட்டான், செவ்வத்தி குளம், ஆரியங்குளம், பாணாங்குளம், தென்கால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும். இவை மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெறுகின்றன. திருப்பரங்குன்றம் பகுதி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபங்களின் கழிவு நீர் தென்கால், பாணாங்குளம் கண்மாயில் கலக்கிறது. திருநகரின் ஒரு பகுதி, விளாச்சேரி ஒருபகுதி, மகாலட்சுமி காலனி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புளியங்குளத்தில் கலக்கிறது. திருநகரின் ஒரு பகுதி, சுந்தர் நகர், நெல்லையப்பபுரம் பகுதிகளில் வெளியேறும் கழிவுநீர் சேமட்டான்குளம் கண்மாயில் கலக்கிறது.திருப்பரங்குன்றம் கிழக்குபகுதியில் வெளியேறும் கழிவு நீர் செவ்வந்திகுளம் கண்மாயில் கலக்கிறது. எஸ்.ஆர்.வி.நகர், இந்திரா நகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நிலையூர் பெரிய கண்மாயில் கலக்கிறது. சேமட்டான்குளம், புளியங்குளம், கண்மாய்களில் ஆண்டு முழுவதும் கழிவு நீர்தான் தேங்கி நிற்கிறது. நிலையூர் கால்வாயில் விளாச்சேரி முதல் ஹார்விபட்டி வரை அனைத்து வீடுகளின் கழிவு நீரும் விடப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் குப்பையாக கொட்டப்படுகிறது. தண்ணீர் வரத்து காலங்களில் இவை கண்மாய்க்குள் செல்கிறது.50 ஆண்டுகளுக்கு மேலாக கழிவு நீர் கலப்பதால், கண்மாய் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் அபாயமும் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, ''திருப்பரங்குன்றம், திருநகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்காக ஜூலை 31ல் டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை