உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நான் கஸ்டம்ஸ் அதிகாரி பேசுகிறேன் பல அவதாரங்கள் எடுக்கும் போலிகள்

நான் கஸ்டம்ஸ் அதிகாரி பேசுகிறேன் பல அவதாரங்கள் எடுக்கும் போலிகள்

மேலுார்:மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் சில நாட்களாக பொதுமக்களுக்கு சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுவது போல் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். அலைபேசி எண் மற்றும் பெயரை சொல்லி உறுதிப்படுத்திக்கொண்டு 'உங்கள் பெயரில் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் ஏ.டி.எம்., கார்டு, போலி பாஸ்போர்ட் மற்றும் போதை பொருள் இருக்கிறது. கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் பணம் தர வேண்டும்' என மிரட்டுவதாக மக்கள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட செல்வராஜ் கூறியதாவது: டில்லி சுங்கத்துறையில் இருந்து சோதனை ஆய்வாளர் கார்த்திக் பேசுவதாக என்னை ஒருவர் தொடர்பு கொண்டார். சிங்கப்பூருக்கு அனுப்பிய பார்சலில் 19 போலி பாஸ்போர்ட், 65 ஏ.டி.எம்., கார்டு, தடை செய்யப்பட்ட 159 கிராம் போதை பொருள் இருப்பதாக கூறினார். 'நான் பார்சல் எதுவும் அனுப்பவில்லை' என்றேன். சிறிது நேரத்தில் வீடியோ காலில் பேசிய நபர், என்னிடம் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை கேட்டார். பின்னர், 'இக்குற்றத்திற்கு சிறை தண்டனை உறுதியாக கிடைக்கும். அதனால் இவ்வழக்கில் இருந்து உங்களை விடுவிக்க முதல்கட்டமாக 50,000 ரூபாய் அனுப்புங்கள்' என்றார். நான் மறுக்கவே, என் 'வாட்ஸாப்'பிற்கு டில்லி நீதிமன்றத்தில் இருந்து கைது வாரன்ட், சொத்து பறிமுதல் உத்தரவு என அரசு முத்திரையுடன் சிறப்பு இயக்குநர் கையெழுத்திட்ட போலி உத்தரவை அனுப்பி மிரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.போலீசார் கூறுகையில் “அலைபேசியில் பணம் கேட்பவர்களிடம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுகுறித்து சைபர் கிரைம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை