| ADDED : மே 11, 2024 05:56 AM
சென்னை: மாம்பழத்தை தொடர்ந்து நடப்பாண்டு பலாப்பழ சீசன் களை கட்டாததால், விலை அதிகரித்து உள்ளது.கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் பலாப்பழம் அதிகளவில் விளைகிறது. இங்கு ஏப்., மற்றும் மே மாதங்களில் சீசன் களைகட்டும். இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், லாரிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.பண்ருட்டியை போல, புதுக்கோட்டை, கன்னி யாகுமரி மாவட்டங்களிலும், இதே மாதம் சீசன் துவங்கும். கேரளாவில் இருந்தும் பலாப்பழங்கள் விற்பனைக்கு வரும். ஆனால், பண்ருட்டி பலாவிற்கு, சந்தையில் தனி மதிப்பு இருக்கும்.நடப்பாண்டு முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளது.இதனால், அதன் விலை அதிகமாக உள்ளது. நல்ல தரமான மாம்பழம் கிலோ 100 முதல், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தர மாம்பழம் 80 முதல், 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதைதொடர்ந்து பலாப்பழ சீசன் களை கட்டாததால், அதன் விலையும் உயர்ந்துள்ளது.கடந்த மாதம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பலாப்பழம் தற்போது, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வாழைப்பழத்தின் விலையும் சற்று அதிகமாக உள்ளது. நடப்பாண்டு முக்கனிகளின் விலை அதிகமாக உள்ளதால், அதன் பிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.