| ADDED : மே 01, 2024 07:37 AM
திருமங்கலம் : மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருமங்கலம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி பகுதிகளில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் உதயகுமார் திறந்து வைத்தார்.அவர் பேசியதாவது: வெப்பச்சலனத்தால் மக்கள் பாதிப்படைகின்றனர். வெப்ப சலனத்தை எதிர்கொள்ள தமிழக அரசு எந்த திட்டத்தையும் எடுக்கவில்லை. கோடை வெயிலால் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலில் தங்கியுள்ளார். வெப்ப சலனத்தால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், ரோட்டோர வியாபாரிகள் தொண்டை வறண்டு, நீர் சத்து குறைந்து, மயக்கம் ஏற்பட்டு பாதிப்படைகின்றனர். இவர்களை காப்பாற்ற அரசு எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.குடிநீருக்கு மூல ஆதாரமாக இருக்கும் வைகை வறண்டு இருப்பதால் தற்போது கூட்டு குடிநீர் திட்டம் ஸ்தம்பித்துள்ளது. கோடை காலங்களில் நீர்நிலைகளில் 23 சதவீதம் நீர் இருக்கும். தற்போது 17 சதவீதம் நீர் இருப்பு உள்ளதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.