மதுரை: மதுரை மாநகராட்சி 92வது வார்டில் அண்ணா நகர், ஜே.பி., நகர், பிரசன்னா காலனி, அக்ரஹாரத் தெரு, பெரியசாமி நகர், புரசரடி ரோடு, என்.எஸ்.கே., ரோடு, மார்க்கண்ட சாமி கோயில் தெரு, கருத்தன் சேர்வை தெரு, பாரதியார் தெரு, காளியம்மன் கோயில் தெரு பகுதிகள் உள்ளன. இதில் 16 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பாதாள சக்கடை, கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவுகளை அகற்ற ஆளில்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குடிநீர் பிரச்னை
ஸ்ரீநிவாசன் கூறியதாவது: வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் குடிநீர் வாரம் ஒருமுறைதான் வருகிறது. போர்வெல் மூலம் கிடைக்கும் உப்பு தண்ணீரை வைத்து சமாளிக்கிறோம். மழைக்காலங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரும்.சமீபத்தில் நல்லதங்காள் ஊரணி துார்வாரப்பட்டது. வீடுகள் அதிகரிப்பால் அதன் நீர்வழிப் பாதை அடைபட்டுள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவடைந்தவுடன் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என நம்புகிறேன். நாய்களால் தொல்லை
மாயாண்டி கூறியதாவது: இங்கு தெரு நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. மாநகராட்சியிடம் எத்தனை முறை தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை. கழிவுநீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.சில இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. குப்பை இரண்டு நாட்களுக்கு ஒருமுறையே அள்ளப்படுகிறது. யாராலும் பொதுமக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.கவுன்சிலர் கருப்பசாமி (தி.மு.க.,): அவனியாபுரம் பகுதிக்கு காவிரி திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அது சரிவர கிடைக்காததால் முல்லைப் பெரியாறில் இருந்து விநியோகிப்பதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதி பணிகள் ஆகஸ்டுக்குள் நிறைவு பெறும். பாதாள சாக்கடை பணிகளுக்கு மார்ச் மாதம் திட்டம் வகுக்கப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தபின் ரூ.495 கோடி செலவில் பணிகள் துவங்கும். திடக்கழிவுகள் திறந்தவெளிக் கால்வாயில் செல்கிறது. துப்புரவு பணியாளர்கள் குப்பையை மட்டுமே அள்ளுகின்றனர். கழிவுநீர் கால்வாயில் உள்ள திடக்கழிவுகளை சாலையோரம் குவிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுத்திகரிப்பு நிலையத்தால் இழப்பு
துப்புரவு பணியாளர்கள் 3 மணி நேரமே வேலை செய்கின்றனர். அவர்கள் சென்றபின் சேரும் குப்பை மறுநாள்தான் அள்ளப்படுகிறது. ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணி நேரம் வேலை செய்தால் சுகாதாரம் மீட்கப்படும். ஆனால் சங்கத்தின் அறிவுரைப்படி பணியை மேற்கொள்கின்றனர்.வெள்ளக்கல் பகுதியில் மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. விதிகளின் படி கழிவுநீரை நுாறு சதவீதம் சுத்திகரித்த பின்பே நீர்நிலைகளில் வெளியிட வேண்டும். ஆனால் 20 சதவீதமே சுத்திகரிக்கப்படுகிறது. மீதி 80 சதவீத கழிவுநீர் புற்கள், கீரை வளர்ப்பதற்காக வெளியிடப்படுகின்றன.ரூ.80 கோடி செலவில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு மாதம் ரூ.18 லட்சம் மின் கட்டணம், ஊழியர்களின் சம்பளம் என ஆண்டுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.