| ADDED : ஜூலை 23, 2024 11:29 PM
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை இணைப்பு கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களின் 2024 ஏப்ரல் பருவத் தேர்வுகளின் முடிவு வெளியிடுவதில் ஏற்பட்ட குழப்பத்தால் 40 சதவீதம் மாணவர்களுக்கு முடிவு தெரியவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பி.ஜி., படிப்புகள் கேள்விக்குறியாகியுள்ளது.இப்பல்கலையின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு உட்பட்டு 110 இணைவிப்பு கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் நடந்த 2024 ஏப்ரல் பருவத் தேர்வுகளின் முடிவு வெளியிடுவதில் பல்கலையில் தாமதம் ஏற்பட்டது.அதேநேரம் தன்னாட்சி கல்லுாரிகளில் ஏப்ரல் தேர்வுகளின் முடிவு வெளியிடப்பட்டு பி.ஜி., படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து வகுப்புகளும் துவங்கிவிட்டது. ஆனால் பல்கலை இணைவிப்பு கல்லுாரிகளின் மாணவர்களுக்கு ஜூலை 5 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில், 40 சதவீதம் மாணவர்களின் முடிவு இன்னும் முழுமையாக தெரியாமல் பல்கலைக்கு அலைந்துகொண்டிருக்கின்றனர். இது அவர்களின் உயர் கல்வியில் சேர்வது கேள்விக்குறியாக உள்ளது. இது தமிழக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பதிவாளர், தேர்வாணையர், டீன் உள்ளிட்ட பதவிகளை துறை பேராசிரியர்களே கூடுதல் பணியாக கவனிக்கின்றனர். அவர்களும் கடும் பணிச்சுமையில் உள்ளனர். தற்போது கல்லுாரி கல்வி இயக்குநர் கார்மேகம் தலைமையில் கன்வீனர் கமிட்டி செயல்பட்டாலும் கமிட்டி உத்தரவுகளை யாரும் சரியாக பின்பற்றுவதில்லை என சர்ச்சையும் எழுந்துள்ளது. அதிர்ச்சி
இதற்கிடையே விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்க 'டம்மி' எண்கள் வழங்குவது உள்ளிட்ட சில பணிகளில் அனுபவம் இல்லாத பி.எட்., கல்லுாரி ஆசிரியர்களை பல்கலை தேர்வுத்துறை பயன்படுத்தியது. இதனால் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்வதில் (டேட்டா என்ட்ரி) ஏராளமான தவறுகள் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்ததுள்ளது. இதனால் 40 சதவீதம் மாணவரின் மதிப்பெண்கள் விடுபட்டுள்ளன. பெரும்பாலான கல்லுாரிகளுக்கு முழுமையான தேர்ச்சி முடிவுகள் கிடைக்காததால் கல்லுாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.மாணவர்கள் தேர்ச்சி நிலை குறித்து தெரிவிக்கும்படி 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கல்லுாரிகள் சார்பில் பல்கலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மதிப்பெண் விடுபட்ட மாணவர்களின் விடைத்தாள்களையும் கண்டுபிடிக்க முடியாமல் அலுவலர்கள் திணறுகின்றனர். தோல்வி அடைந்த மாணவர்களுக்கு அடுத்த வாரம் துணைத் தேர்வுகள் நடக்கின்றன. அதற்கும் விண்ணப்பிக்க முடியாமலும், தேர்ச்சி பெற்றவர் பி.ஜி., படிப்புகளில் சேர முடியாத சூழ்நிலையால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து கன்வீனர் கமிட்டியின் நடவடிக்கையும் வெளிப்படையாக இல்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களின் பி.ஜி., சேர்க்கை பாதிக்காத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.