| ADDED : மே 12, 2024 03:45 AM
மதுரை: உலக மியூசிய தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான பல்லாங்குழி விளையாட்டுப் போட்டி நடந்தது. 80 வயது பாட்டி வரை 40 பேர் பங்கேற்றனர். ஜெய்ஷனா ஸ்ரீ முதல்பரிசு, தீக் ஷனா ஸ்ரீ 2ம் பரிசு, ஆதித்யா 3ம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு கலைஞர் நுாற்றாண்டு நுாலக இணை இயக்குநர் தினேஷ்குமார் பரிசு வழங்கினார். பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.போட்டியில் பங்கேற்ற மதுரை ஆண்டாள்புரம் பாக்கியலட்சுமி 79, கூறியதாவது: பெண்கள் பூப்பெய்யும் போது தனிமையில் இருப்பதால் பல்லாங்குழி விளையாட்டு முக்கிய துணையாக இருந்தது. தற்போது வரை பேரன், பேத்திகளுடனும் இப்போதும் தனிமையில் பல்லாங்குழி விளையாடுகிறேன். இதில் கணக்கீடு தான் முக்கியம். எந்த குழியில் உள்ள முத்துக்களை முதலில் எடுத்தால் ஜெயிக்க முடியும் என்பதை கணக்கிடுவதே சாமர்த்தியம்.இன்று (மே 12) காலை 10:00 முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் சொட்டாங்கல் விளையாட்டு குறித்து காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறியதாவது: கண்ணுக்கு பயிற்சி தரும் விளையாட்டு இது. சிறியவர்கள் 5 கல், பெரியவர்கள் 7 கல் வைத்து விளையாடுவர். ஒற்றைக் கல்லை மேலே துாக்கி எறிந்து மீதியுள்ள கல்லை தரையில் வைத்து அந்தரத்தில் நிற்கும் கல் கீழே விழுவதற்குள் பிடித்து தரையில் உள்ள கல்லையும் எடுப்பது தான் விளையாட்டு. கவனத்தை அதிகரிக்கும் இந்த விளையாட்டு கைகளுக்கும் சிறந்த பயிற்சியாகும் என்றார்.