| ADDED : ஜூன் 10, 2024 05:21 AM
குருவித்துறை,: மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை, தானம் அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய நடைப்பயணம் நிகழ்ச்சி, பொதுமக்கள் அறிந்திராத வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பாதுகாக்கும் வகையில் நடந்தது.இதில் வரலாற்று பேராசிரியர் சேதுராமன் பேசுகையில், ''சோழவந்தான் வைகையாற்றின் தென்கரை பகுதி குருவித்துறை. இங்குள்ள ஒரு குன்றின் பெயர் 'குருவிக்கல்' என பாண்டியர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குரு பகவானின் இத்துறைக்கு குருவித்துறை என பெயர் வந்தது'' என்றார்.தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் பேசுகையில், ''மொழி, உணர்வு, பண்பாடால் வேறுபட்டிருந்தாலும் நம்மை இணைப்பது ஆன்மிகம். புராணங்கள் அடிப்படையிலான வரலாறு, உண்மையான வரலாறு என வரலாற்றில் இருபிரிவுகள் உள்ளன. இக்கோயிலில் 14 கல்வெட்டுகள் உள்ளன. அதில் கோயிலுக்கு வழங்கிய தானங்கள், திருப்பணிகள், கடவுளுக்கு படைக்கும் நைவேத்தியங்கள் பற்றியும், பராக்கிரம பாண்டியன் கட்டிய வைகை சிற்றணை பற்றியும், சோழவந்தானின் பழைய பெயர் 'பாகனுார்' எனவும் பொறிக்கப்பட்டுள்ளது என்றார்.மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி முனியப்பன், தானம் அறக்கட்டளை இயக்குனர் வாசிமலை, சோலை வட்டாரக் களஞ்சிய உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.