மதுரை, : நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படும் போது சி.ஏ.பி.ஜி.'(கொரோனரி ஆர்ட்ரி பைபாஸ் கிராப்ட்) எனப்படும் திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்தால் முன்பிருந்ததை விட மேம்பட்ட வாழ்க்கை வாழலாம்'' என மதுரை அப்போலோ மருத்துவமனை முதுநிலை இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அப்போலோ மருத்துவமனையில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதய அறுவை சிகிச்சை செய்தபின் பெரும்பாலோனாரின் வாழ்க்கை முறை முன்பை விட சிறப்பாக, மேம்பட்டதாகவே உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் நன்றாகவே வாழ முடியும். பயம், பதட்டம் கட்டுக்கதைகள்
திறந்தநிலை இதய அறுவை சிகிச்சையைப் பற்றி தவறான கதைகள் பரப்பப்படுகின்றன. அதிகப்படியான பயம் முக்கிய காரணம். கொழுப்பு இல்லாத உணவை சாப்பிடுவது, உடல் எடை குறைப்பது, உடற்பயிற்சி செய்வது, ஏரோபிக்ஸ், கார்டியோ சிகிச்சை மேற்கொள்வது சிரமம் என நினைக்கின்றனர். அறுவை சிகிச்சை செய்த பின் சில நடைமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று சொல்வதே தவறு. திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உண்மையான உடல்நலத்தை பெறமுடியாது. அறுவை சிகிச்சையே தீர்வு
'ட்ரிபிள் வெசல்' நோய் எனப்படும் 'எக்ஸ்டென்டன்ட் கொரோனரி ஆட்ரி' தொந்தரவுக்கு திறந்தநிலை அறுவை சிகிச்சை நல்ல தீர்வாக அமையும். பயம், வலி, போன்ற காரணங்களால் திறந்த நிலை அறுவை சிகிச்சையை பலர் விரும்புவதில்லை. மத்திய வயதை அடைந்தவர்கள் வீட்டை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்தால் பொருளாதார ரீதியாக, குடும்பரீதியாக பாதிக்கப்படலாம் என நினைப்பதுண்டு. முழு உடல்தகுதி மீண்டும் கிடைக்காது எனவும் நினைக்கின்றனர். இதெல்லாம் உண்மையில்லை.ஒருவேளை 'ஸ்டென்ட்' வைத்தோ அல்லது மருந்துகளின் மூலமோ மாரடைப்புக்கு சிகிச்சை அளித்தால் கூட இதயம் குணமடைய ஆறு முதல் 8 வாரங்களாகும்.'ஸ்டென்ட்' பொருத்துவதோ, இதய அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தாலும் இதே நடைமுறை தான் பின்பற்ற வேண்டும். இதய அறுவை சிகிச்சை செய்யும் போது மார்பு பகுதியில் உள்ள எலும்பை திறந்து அதனுள் பகுதியில் இருக்கும் இதயத்தில் அறுவை சிகிச்சை செய்வதால் இதயத்தோடு எலும்பும் குணமடைய வேண்டும். மூன்று மாதங்கள் கவனம் தேவை
வழக்கமாக எலும்பு முறிந்தாலோ, உடைந்தாலோ 6 முதல் 8 வாரங்களில் குணமாகும். முழுமையான பலம் பெற 3 மாதங்களாகும். அதன் பின் முன்பு போல எதையும் செய்யமுடியும். இதய அறுவை சிகிச்சை செய்த தடகள வீரர், நீச்சல் வீரர், பளு துாக்குபவர்கள் கூட 12 வார முடிவில் பழைய உடல்திறனை பெறமுடியும். வழக்கம் போல அலுவலகம் செல்ல, தாம்பத்ய வாழ்க்கையை தொடரமுடியும். அறுவை சிகிச்சை செய்த முதல் 3 மாதங்கள் வரை 10 கிலோவுக்கு மேல் பளு துாக்கக்கூடாது. அதன் பின் ரன்னிங், ஜாகிங், நீச்சல், ஏரோபிக்ஸ், யோகா செய்யலாம். ஆங்கில நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் இதய அறுவை சிகிச்சைக்கு பின்னும் வெயிட் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் 70 வயதிலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 80 வயதிலும் திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.இந்த சிகிச்சை முறை வாழ்க்கையின் தரத்தை அதிகப்படுத்துவதோடு வாழ்க்கையை முன்பை விட அழகாகவும் மேன்மையாகவும் மாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.