மூளை கட்டி அறுவை சிகிச்சையில் ‛பைபர் டிராக்கிங் நேவிகேஷன் 3.0
மதுரை: தெற்காசியாவில் முதன்முறையாக மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் 'பைபர் டிராக்கிங் நேவிகேஷன் 3.0' சாப்ட்வேர்' மூலம் 3 நோயாளிகளின் மூளையில் உள்ள கட்டி துல்லியமாக கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.புதிய தொழில்நுட்பத்தின் செயல்பாடு குறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் எம்.ஜே.அருண்குமார் கூறியதாவது:'நேவிகேஷன் 2.0' தொழில்நுட்பத்தின் போது மூளை கட்டியை சுற்றியுள்ள நரம்புகள் துல்லியமாக தெரியாது. 'நேவிகேஷன் 3.0' தொழில்நுட்பத்தில் அகச்சிவப்பு கேமரா மூலம் மூளையில் கட்டி இருக்கும் இடம் வரைபடம் போல காட்டப்படும். வழக்கமான எம்.ஆர்.ஐ., பரிசோதனை படங்களை 'டிப்யூசன் டென்சர் இமேஜிங்' (டி.டி.ஐ.) தொழில்நுட்பத்திற்கு மாற்றி அந்த படங்களை அடிப்படையாக வைத்து கட்டிகளின் இருப்பிடம் துல்லியமாக கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நரம்புகளுக்குள் ஊடுருவிய கட்டிகளின் வெளிப்பகுதியை மட்டும் அகற்றி கதிரியக்கமும் கீமோதெரபி சிகிச்சையும் வழங்குகிறோம். புற்றுநோய் அல்லாத கட்டிகள் முழுமையாக அகற்றப்படும் போது அவை மீண்டும் வளர்வதில்லை.இந்த அறுவை சிகிச்சையின் போது மூளையின் நரம்புத் தண்டுகளின் செயல்பாடுகளை நேரடியாக பார்க்க முடியும். கை, கால்களை இயக்கும் நரம்புகள், பேச்சு மற்றும் செயல்பாட்டுக்கான நரம்புகளின் ஓட்டத்தை பார்த்துக் கொண்டே கட்டியை மட்டும் அகற்ற முடிந்தது. நோயாளிக்கு எந்த பக்கவிளைவும் பக்கவாதமும் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது. இரண்டு நோயாளிகள் பத்து நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினர். 3வது நோயாளி மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளார்.ஜெர்மனியின் பிரைன் லேப் உருவாக்கியுள்ள இத்தொழில்நுட்பத்தால் அறுவை சிகிச்சைக்கான நேரம் குறைகிறது. நோயாளி சீக்கிரம் குணமடைய முடியும். இன்சூரன்ஸ் திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என்றார்.டாக்டர்கள் கணேஷ், அருண்குமார், ரமா சங்கரி, பாஹிமா, விநாயகமணி, பணிக்கர், சங்கீதா, பிரைன் லேப் இந்திய நிர்வாகிகள் விபா சிங், அர்த்தநாரீஸ்வரர் உடனிருந்தனர்.