| ADDED : ஜூலை 05, 2024 11:19 PM
மதுரை: மதுரை பெண் வங்கி ஊழியரிடம் பேஸ்புக்கில் பழகி படங்களை 'மார்பிங்' செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிட போவதாக கூறி மிரட்டி ரூ.3 லட்சம், 4 பவுன் நகைகளை பறித்த சென்னை நுாலக ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த 23 வயது பெண், தனியார் வங்கி ஊழியராக உள்ளார். 2018 ல் கல்லுாரி மாணவியாக இருந்தபோது பேஸ்புக் மூலம் சென்னை மத்திய நுாலக ஊழியர் என்றுக்கூறி தண்டபாணி என்பவர் அறிமுகமானார். இருவரும் காதலித்த நிலையில், பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து கண்டித்தனர். இதனால் தண்டபாணியுடன் பழகுவதை நிறுத்திக்கொண்ட அப்பெண்ணுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைத்தனர்.இந்நிலையில் வங்கியின் அலைபேசி மூலம் அப்பெண்ணை தொடர்புக்கொண்ட தண்டபாணி, மீண்டும் பேச ஆரம்பித்தார். பழகிய போட்டோக்களை 'மார்பிங்' செய்து சமூகவலைத்தளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டி வாங்கினார். கடந்த மாதம் மீண்டும் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டினார். தரமறுத்த அப்பெண்ணின் 4 பவுன் வளையல்களை பறித்துக்கொண்டு தலைமறைவானார்.இதுகுறித்து போலீசில் அப்பெண் அளித்த புகாரில், 'பணம் பெற்றுக்கொண்டதோடு, என் கன்னத்தில் அறைந்து ஆபாசமாக பேசி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த திருத்தணி அருகேயுள்ள பொதட்டூர் பேட்டை தண்டபாணி மீது நடவடிக்கை எடுத்து நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும்' என தெரிவித்திருந்தார். தண்டபாணி மீது தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.