| ADDED : ஆக 13, 2024 06:16 AM
மதுரை : மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூகநல பாதுகாப்பு திட்ட அலுவலர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட தவசிப்பாண்டி என்பவருக்கு மாவட்ட மறுவாழ்வு நலத்துறை சார்பில் சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். தொழில் வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்ரமணியன், முடநீக்கியல் தொழில் நுட்பாளர் ஜெய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.எம்.கல்லுப்பட்டி அய்யம்மாள் அளித்த மனு: எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் எனக்கு அவ்வப்போது நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுத் தந்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் எனது ஆதார், அடையாள அட்டைகளை பயன்படுத்தி எனது ஒப்புதலின் பேரில் ரூ.1.5 லட்சம் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்துவதாக தெரிவித்தார். அதன்படி செலுத்தவில்லை. இதே போல நிதிநிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து காளியம்மாள், காளீஸ்வரி, அழகுமாரியம்மாள், வீரலட்சுமி உட்பட 30க்கும் மேற்பட்டோரிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.