உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆழியார் ஆராய்ச்சி நிலையத்தில் இளநீர் தென்னங்கன்று விற்பனை

ஆழியார் ஆராய்ச்சி நிலையத்தில் இளநீர் தென்னங்கன்று விற்பனை

மதுரை, : பொள்ளாச்சி அருகே ஆழியார் தமிழ்நாடு வேளாண் பல்கலை தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் குட்டை ரக இளநீர் தென்னங்கன்றுகள் விற்பனைக்குள்ளது.இது குறித்து ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதாவது:குட்டை ரக தேங்காயின் காய்ந்த பருப்பு (கொப்பரை) ரப்பர் போன்று வழுக்குவதால் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுத்துவதில்லை. இவை இளநீருக்காகவே வளர்க்கப்படுகிறது. இம்மரங்களின் ஓலை மட்டைகளும் தேங்காயின் நிறமும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் அலங்காரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் தேங்காய், கொப்பரை விலை வீழ்ச்சி காரணமாக இளநீர் ரகங்களை விவசாயிகள் பயிரிடுவது நல்லது.ஆராய்ச்சி நிலையத்தில் சவுகாட் ஆரஞ்சு குட்டை, சவுகாட் பச்சை குட்டை, கங்கபாண்டம் பச்சை குட்டை, மலேசியன் ஆரஞ்சு குட்டை, மலேசியன் மஞ்சள் குட்டை ரகங்கள் வளர்க்கப்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் தாய் மரங்களில் இருந்து கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பத்து மாத கன்றுகளாக விற்கப்படுகிறது. நெட்டை ரகங்களும் இங்கு விற்கப்படுகிறது.குட்டை ரகங்கள் குறைந்த உயரம் வளரக்கூடியது. தண்டுப்பகுதி மெல்லியதாகவும் கொண்டைப்பகுதி சிறிதாகவும் இருக்கும். நடவு செய்த மூன்றாண்டுகளில் காய்க்க தொடங்கும். 25 முதல் 35 ஆண்டுகள் பலன் தரும். இளநீர் காய்கள் உருண்டையாக பல வண்ணங்களில் உள்ளதால் வீடுகளின் முன்புறம் அழகுக்காகவும் இளநீருக்காகவும் வளர்க்கலாம். தோப்பாக பயிரிடும் போது ஆண்டில் மரம் ஒன்றுக்கு 150 முதல் 200 இளநீர் காய்கள் கிடைக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடுகளில் வளர்க்க விரும்புபவர்களும் விவசாயிகளும் 94431 53880 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ