| ADDED : மே 04, 2024 05:30 AM
மதுரை: வேளாண் துறை சார்பில் ஐந்து ஏக்கர் வரையிலான பயறு, நிலக்கடலை, எள் விதைக்கு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், துணை இயக்குநர் மேரி ஐரின் ஆக்னிட்டா கூறியதாவது:கோடைகால பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 216 எக்டேரில் உளுந்து, பாசிப்பயறு வகைகள் பயிரிடவும் 100 எக்டேரில் எள், 200 எக்டேரில் நிலக்கடலை பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரலில் மட்டும் 130 எக்டேரில் பயறு, 171 எக்டேரில் நிலக்கடலை, 100 எக்டேரில் எள் சாகுபடி செய்யப்பட்டுஉள்ளது. விவசாயிகள் நிலத்தை தரிசாக விட்டால் மண் கெட்டியாகி காற்றோட்டம் தடைபடும். கோடை உழவு செய்யும் போது மண்ணின் ஆழத்தில் உள்ள கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படும். அடுத்து மழை பெய்யும் போது நிலத்தில் நீர்ப்பிடிப்பு திறன் அதிகரித்து மண் மென்மையாகும்.விதை கிராமத் திட்டத்தில் விதைகளுக்கு 50 சதவீத மானியம். விவசாயிக்கு ஒரு ஏக்கர் மட்டுமே அனுமதி. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மானியத்தில் 5 ஏக்கருக்கு தேவையான விதைகளை அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் பெறலாம். தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்றனர்.