| ADDED : ஜூலை 29, 2024 07:00 AM
திருப்பரங்குன்றம் : நிலையூர் கால்வாயிலுள்ள தடுப்பணை 20 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாததால் சேதம் அடைந்துள்ளது. இக்கால்வாயையொட்டி இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லாததால் வெளியேறும் தண்ணீர் அருகிலுள்ள வீடுகளை சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து அப்பகுதி அரவிந்தன் கூறியதாவது: வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய் வழியாக நிலையூர் பெரிய கண்மாய் செல்லும். ஹார்விபட்டி அருகே இந்திரா நகர் பகுதியில் இக்கால்வாயில் 50 ஆண்டுக்கு முன் தடுப்பணை அமைக்கப்பட்டது. இது சீரமைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.தற்போது தடுப்பணை முழுமையாக சேதம் அடைந்து விட்டது. உடனே சரிசெய்யவில்லை என்றால், விரைவில் அதில் உள்ள கற்கள் விழுந்துவிடும். கால்வாயின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லாததால் வரத்து காலங்களில் தண்ணீர் வெளியேறி இந்திராநகர், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசாநகர் பகுதி வீடுகளை சூழ்ந்துவிடுகிறது. அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பது வாடிக்கையாக உள்ளது. சில நாட்களுக்குப் பின் தேங்கிய நீர் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி தொற்று நோயை பரப்புகின்றன. தடுப்பணையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றார்.தி.மு.க., கவுன்சிலர் இந்திராகாந்தி: சில தினங்களுக்கு முன்பு நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் சுந்தரமூர்த்தியும், நானும் அப்பகுதியை பார்வையிட்டோம். தடுப்பணையை சீரமைக்க மதிப்பீடுடன் அனுமதி பெற்று விரைவில் பணிகள் துவங்கும் என்றார்.