| ADDED : ஜூலை 18, 2024 05:18 AM
மதுரை, : மதுரையில் மாவட்ட வனத்துறையின் கீழ் வாடிப்பட்டி அருகே தாடகை 'டிரெக்கிங் ரூட்'டுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.மாவட்டத்தில் சோழவந்தான் வனச்சரகத்திற்குட்பட்ட 16 கி.மீ., சிறுமலையேற்ற (வாடிப்பட்டி - குட்லாடம்பட்டி அருவி அருகே) சாகச பயணம், உசிலம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தொட்டப்பநாயக்கனுாரில் 12 கி.மீ., துார மிதமான மலையேற்ற பயணம், மதுரை வனப்பகுதிக்குட்பட்ட 6 கி.மீ., துார கிளுவமலை, 6 கி.மீ., துார கொடிமங்கலம் எளிய மலையேற்ற பயணத்திற்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது.காலப்போக்கில் குட்லாடம்பட்டி அருவி அருகே உள்ள தாடகை டிரெக்கிங் பாதை தவிர மற்ற மலையேற்ற பாதைகள் புதர் மண்டி மறைந்தன. தற்போது தமிழகத்தில் 40 இடங்களில் மலையேற்ற பயணத்திற்கு அரசு அனுமதி வழங்கியதில் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி - குட்லாடம்பட்டி 16 கி.மீ., பாதை (தாடகை) தேர்வானது. வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுச்சூழல் காவலர்களுக்கு (ஈகோ வாட்ச்சர்ஸ்) தமிழக வனஅனுபவ கழக குழுவினர் மூலம் மதுரையில் இரண்டு நாட்கள் மலையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டது.முதல்நாள் மாவட்ட அலுவலகத்திலும், நேற்று குட்லாடம்பட்டி தாடகை நாச்சியம்மன் கோயில் பகுதியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயணிகளை கையாளும் விதம், மலையேறும் போதே அவசர நிலையை சமாளிப்பது போன்ற பயிற்சி அளிக்கப்பட்டது.ஆறாண்டுகளாக சேதமடைந்திருந்த குட்லாடம்பட்டி அருவிக்கு செல்லும் பாதையை சீரமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் இந்த மலையேற்ற பயணமும், மதுரை மக்களுக்கு கூடுதல் பொழுதுபோக்காக அமையும். ஆகஸ்ட் முதல் மலையேற்ற பயணம் தொடங்கும்.