| ADDED : ஜூன் 20, 2024 04:58 AM
மதுரை: 'தொழில் துவங்க கடனும் மானியமும் ஒரே இடத்தில் பெறுவதற்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்) கைகொடுக்கிறது' என மதுரை மடீட்சியாவில் நடந்த கருத்தரங்கில் மண்டல மேலாளர் கார்த்திகேயன் பேசினார்.மடீட்சியா, சி.ஐ.ஐ., சார்பில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் வளர்ச்சி, இ - மார்க்கெட்டிங், தொழில் துவங்க மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானியம் குறித்த கருத்தரங்கு மதுரை மடீட்சியாவில் நடந்தது. சி.ஐ.ஐ. மண்டலத் தலைவர் சவுந்தர் கண்ணன் வரவேற்றார். மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், இ - மார்க்கெட்டிங் ஜெம் போர்ட்டல் ஆலோசகர் சபரீஷ், டிரெட்ஸ் திட்ட தொடர்பு மேலாளர் பரணிதரன், தேசிய சிறுதொழில் கழக மேலாளர் செந்தில், சிட்பி மேலாளர் பைடா ராமகிருஷ்ணா, ஏற்றுமதி கிரெடிட் கேரண்டி கார்ப்பரேசன் உதவி மேலாளர் சுபாஷ் குமார் ஜா பேசினர்.டிக் மண்டல மேலாளர் கார்த்திகேயன் பேசியதாவது: தொழில் துவங்க வங்கிகளில் கடன் பெற்றால் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியம் பெறலாம். 'டிக்' அமைப்பில் தொழில் துவங்க கடன் பெறுவதோடு மானியமும் பெற முடியும். அரசு திட்டங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோரை மேலே துாக்கி விடும் வகையில் உள்ளது. தொழில்முனைவோரின் பங்களிப்பு 5 முதல் 10 சதவீதம் இருந்தால் போதும்.சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, துாத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்ட வெள்ள பாதிப்பின்போது அங்குள்ளோர் தொழிலை சரிசெய்ய தலா ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. இதற்கென ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனைத்து உற்பத்தி, சேவைத் தொழில்களுக்கும் டிக் மூலம் கடன் பெறலாம். 3 முதல் 6 சதவீத வட்டி மானியம் உண்டு.இயந்திரங்கள் வாங்கினால் 5 சதவீத வட்டி மானியம் உண்டு. ஏற்கனவே வழங்கி நிறுத்தப்பட்ட 6 சதவீத வட்டி மானியத்தை திரும்பத்தர அரசு பரிசீலனை செய்கிறது. உற்பத்தி, சேவை எதுவாக இருந்தாலும் தொழிற்சாலைகள் அணுக எளிய நடைமுறை டிக் அலுவலகத்தில் உள்ளது என்றார்.