-
மாதத்தில் 2வது ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணிக்கு பாரம்பரியநடைபயணம் மேற் கொள்ளப்படுகிறது. மீனாட்சியம்மன் மேற்கு கோபுரத்தில் இருந்து நந்தி சிலை, விட்டவாசல், ராயகோபுரம், தேர்முட்டி, விளக்குத்துாண், பத்துத் துாண், மகால் வரை பயணிகளை சுற்றுலா வழிகாட்டிகள் அழைத்துச் செல்கின்றனர். ஒவ்வொரு இடத்தின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் விளக்குவதால் இந்த நடைபயணத்தை வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் விரும்புகின்றனர். இந்த பாதையில் செல்லும் போது மதுரையின் பாரம்பரியமான பருத்திப்பால், பணியாரம், தென்னங்குருத்து, ஜிகர்தண்டா போன்ற உணவுகளையும் சுவைக்கின்றனர். இந்த வகையில் 'உணவு நடைபயணம்' துவக்கியுள்ளதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: இரண்டு மாதங்களாக சுற்றுலா பயணிகள் மத்தியில் உணவு நடை வரவேற்பை பெற்றுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து விளக்குத்துாண் வரையான நடை பயணத்தின் போது மதுரையின் பிரபலமான மாலை நேர பட்டர்பன், தென்னங்குருத்து, ஜிகர்தண்டா, கீரை வடை, பருத்திப்பால், பணியாரம், வெள்ளை அப்பம், அல்வாவை பயணிகள் சுவைத்து மகிழ்கின்றனர். கொத்து பரோட்டா, பன் பரோட்டா, கறிதோசை, வெண்பொங்கல் சாம்பாரும் இவர்களின் விருப்ப பட்டியலில் இடம் பிடித்துஉள்ளது. கடைசியாக மல்லிகை பூச்சரத்தை வாங்கி முகர்ந்து பார்த்து ரசிக்கின்றனர்.இந்த பாரம்பரிய நடைபயணம், உணவு நடையின் மூலம் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகளுக்கு மதுரையின் கலாசாரம், உணவுகளை பிரபலப்படுத்துகிறோம். இதன் மூலம் கடைக்காரர்களுக்கும் வருமானம் கிடைப்பதோடு மதுரையின் புகழும் வெளியில் பரவும். கார்ப்பரேட் நிறுவன குழுக்களுக்கும் சுற்றுலா வழிகாட்டிகள் மூலம் ஏற்பாடு செய்கிறோம் என்றார். தொடர்புக்கு: 0452 - 233 4757.