ஒப்புதல் அளித்த இடத்தில் மீன்சிலையை நிறுவ வேண்டும்
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி தகவல் மைய வளாகம் முன் பகுதியில் மீன் சிலையை நிறுவ உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.சங்கத் தலைவர் ஜெகதீசன் மனு: மதுரை ரயில்வே ஸ்டேஷன் முன்பு, பாண்டிய மன்னர்களுக்குப் பெருமை சேர்த்த அடையாளச் சின்னமான 3 மீன்கள் நீருற்றில் துள்ளுவது போன்று 15 அடி உயரம், 3 டன் எடையில் அமைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான பித்தளை சிலையை நிறுவி பராமரித்தோம்.2022ல் விரிவாக்க பணியின்போது அச்சிலையை அகற்றி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாக்கப்பட்டு வந்தது. மாற்று இடம் கிடைத்து பணிகளை துவக்கிய போது, மெட்ரோ ரயில் வருவதால் மீண்டும் அங்கு மீன் சிலையை அமைக்க முடியாது என தெரிவித்தனர்.இதற்கிடையே ராமநாதபுரம் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மீன் சிலையை மீண்டும் அமைக்க உத்தரவிடவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தார்.அந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் காந்தி தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு பலஇடங்களை ஆய்வு செய்து, பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி தகவல் மைய வளாகம் முன்பு தேர்வு செய்தது. அங்கு மீன் சிலை நிறுவ கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அந்ததீர்மானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, மீன்சிலையை இரயில்வே நிர்வாகம், வர்த்தக சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும், ஏற்கனவே ஒப்புதல் அளித்த இடத்தில் சிலையை நிறுவ வேண்டும் என்று உத்தரவிட்டது.ரயில்வே நிர்வாகம் சிலையை ஒப்படைத்ததும், சிலையை நிறுவ முன்பிருந்த கமிஷனர் தினேஷ்குமாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. தமிழக முதல்வர் சுற்றுலா மையத்தை வீடியோகான்பரன்ஸ் மூலம் திறக்க இருப்பதாகவும், அதன்பின் பணிகளை துவக்குமாறும் கூறினார்.இந்நிலையில் தத்தநேரி மயானம் செல்லும் வழியில் மாநகராட்சி நிர்வாகமே நான்கு அடி உயர மீன் சிலை தயார் செய்து நிறுவ இருக்கிறது. இதனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக, மாநகராட்சியே மீன் சிலையை தயார் செய்து எங்கள் சிலைபோல நிறுவ உள்ளது கண்டனத்திற்குரியது.வேறு எந்த இடத்திலும் மீன் சிலையை நிறுவ தொழில் வர்த்தக சங்கம் தயாராக இல்லை. ஏற்கனவே முடிவு செய்த இடத்தில் நிறுவ மாநகராட்சி ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.