உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இழப்பீடு நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

இழப்பீடு நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

மதுரை:மதுரை மாவட்டம், இலந்தைக்குளத்தில் சுரேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலம், மதுரை - திருச்சி நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்த மத்திய அரசு 2004ல் அறிவிப்பு வெளியிட்டது. உரிய இழப்பீடு கோரி, மதுரை டி.ஆர்.ஓ.,விற்கு சுரேந்திரன் விண்ணப்பித்தார். டி.ஆர்.ஓ., 84,047 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். கூடுதல் இழப்பீடு கோரி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டப்படி சமரச நடுவரான மதுரை கலெக்டரிடம் சுரேந்திரன் விண்ணப்பித்தார். கலெக்டர் தள்ளுபடி செய்தார்.எதிர்த்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சுரேந்திரன் மேல் முறையீடு செய்தார். நீதிமன்றம், 27 லட்சத்து 3,558 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய திருச்சி திட்ட இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் வி.பவானி சுப்பராயன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:கையகப்படுத்திய நிலத்திற்கான இழப்பீட்டை நியாயமான முறையில் நிர்ணயிக்க வேண்டும் என, நிலத்தை இழந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர். சட்டப்படி அமைக்கப்பட்ட சமரச நடுவரின் நடவடிக்கைகளில் உண்மைத் தன்மை இல்லாதபோது, கீழமை நீதிமன்றம் அதிகார வரம்பை பயன்படுத்தி, நிலத்தை இழந்தவரின் நலன் கருதி இழப்பீட்டை நிர்ணயம் செய்ய வேண்டும். அதில், அந்த நீதிமன்றம் தலையிட்டு சரியாக இழப்பீடு நிர்ணயித்துள்ளது.இழப்பீடு கோருபவர் போதிய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். நிலத்தின் சந்தை மதிப்பை நிர்ணயிக்க உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை சமரச நடுவர் பரிசீலிக்கவில்லை. நஹாய் டோல்கேட்டுகளில் காருக்கு, 150 ரூபாய், லாரிக்கு, 2,250 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 கிலோ அரிசி விலை, 700 ரூபாய்க்கு அதிகமாக இருக்கிறது. அருகிலுள்ள நிலத்தின் சந்தை மதிப்பு ஒரு சென்ட்டிற்கு, 29,212 ரூபாய். இதை கருத்தில் கொள்ளாமல் கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு சென்டிற்கு, 695 ரூபாய் அல்லது சதுர மீட்டருக்கு, 17.17 ரூபாய் என சமரச நடுவர் நிர்ணயம் செய்துள்ளார். இது நீதிமன்றத்தின் நீதித்துறை மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சுரேந்திரன் 9 சதவீத வட்டியுடன், 27 லட்சத்து 94,012 ரூபாய் இழப்பீடு பெற உரிமையுண்டு.இழப்பீட்டை தீர்மானிக்கும் சமரச நடுவர் கலெக்டர். அவருக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கிறார். கடினமான பணிச்சுமையால் நடைமுறையை பின்பற்றி சரியாக கலெக்டர் இழப்பீடு நிர்ணயிப்பார் என எதிர்பார்க்க முடியாது. நிலத்தை இழந்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, இழப்பீடு நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை சமரச நடுவராக நியமிப்பது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும் என, இந்நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்