| ADDED : ஜூன் 26, 2024 07:20 AM
மதுரை : மதுரை விரகனுார் ரிங் ரோடு சந்திப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.நீதிமன்ற பதிவாளர் (நீதித்துறை) வெங்கடவரதன் தாக்கல் செய்த மனு: விரகனுாரில் விமான நிலையம், ராமநாதபுரம் செல்லும் ரோடுகள் சந்திப்பில் நீர்நிலை உள்ளது. அதில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், கட்டுமானங்கள் உள்ளன. வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை செய்திருக்க முடியாது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. நீர்நிலைகளுக்கு வழங்கிய பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். நீர்நிலைகளை ஏற்கனவே இருந்த நிலைக்கு கொண்டுவர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கவோ, வரன்முறைப்படுத்தவோ கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விரகனுார் ரோடு சந்திப்பு நீர்நிலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்து, நீர்நிலை தொடர்பாக தனியாருக்கு சாதகமாக பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து ரத்து செய்ய வேண்டும்.ஆக்கிரமிப்புகளை தடுக்கத் தவறிய அல்லது நீர்நிலை தொடர்பாக தனியாருக்கு பட்டா வழங்க துணைபோன அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கள அலுவலர்கள் மீது பொறுப்புகளை நிர்ணயிக்க வழிகாட்டுதல்களை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இதை தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு தமிழக வருவாய்த்துறை செயலர், நில நிர்வாக கமிஷனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்கள் ஒத்திவைத்தது.