உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாயில் அடைப்பால் வீடுகளைச் சூழ்ந்த தண்ணீர்

கால்வாயில் அடைப்பால் வீடுகளைச் சூழ்ந்த தண்ணீர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் நீர் வரத்து கால்வாய் சீரமைக்கப்படாததால் கண்மாயில் திறந்த தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்து நின்று பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியது.தென்கால் கண்மாயில் இருந்து அவனியாபுரம் பகுதி சாகுபடிக்கு திறக்கப்படும் தண்ணீர் செங்குன்றம் நகர், பாம்பன் நகர் கால்வாய் வழியாக செல்லும். கண்மாய் கரையில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அப்போது, கண்மாயில் 2 மடைகள் சேதம் அடைந்தன. இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் கடந்தாண்டு விவசாயம் பாதித்தது. மடைகளை சீரமைக்க ஓராண்டாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தி வந்தனர்.ஓராண்டுக்கு பின்பு சேதமடைந்த மடைகள் தற்போது சீரமைக்கப்படுகின்றன. அதனால் கண்மாய் தண்ணீர் சிறிதளவு வெளியேறியது. அந்த தண்ணீர் செல்லும் செங்குன்றம் நகர் பகுதியில் கால்வாயில் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் தண்ணீர் வெளியேறி செங்குன்றம் நகர், அன்னை மீனாட்சி நகர் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கிறது.குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் ஜெயபாலன், மோகன், குமார் கூறுகையில், ''விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கும் போதெல்லாம் இதே நிலைதான் ஏற்படுகிறது. கால்வாய் சீரமைக்கப்படாததால் தண்ணீர் வீணாவதுடன் விவசாயத்திற்கும் போதுமான அளவு செல்வதில்லை. தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் நடமாடுவதற்கு மக்கள் சிரப்படுகின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்புகின்றன. கால்வாயை முழுமையாக சீரமைத்த பின்பே தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ