| ADDED : ஜூலை 09, 2024 06:41 AM
மதுரை : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர மறுவாழ்வு அளிக்கும் திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். தொழிலாளர்களை நிறுவனம் வெளியேற்றக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மாஞ்சோலை அமுதா தாக்கல் செய்த பொதுநல மனு: மாஞ்சோலையில் 'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' (பி.பி.டி.சி.,) நிறுவன தேயிலை தோட்டத்தில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறோம். குழந்தைகள் அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். தமிழக அரசிடமிருந்து 99 ஆண்டுகள் குத்தகைக்கு மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை வாங்கி பி.பி.டி.சி., நிர்வகிக்கிறது. குத்தகைக் காலம் 2028 பிப்.,11 ல் முடிகிறது. 8374 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக 2018 ல் அரசு அறிவித்தது. அது களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் வருகிறது. புலிகள் சரணாலயத்தில் வசிக்கும் நபர்களை இடமாற்றம் செய்ய மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது.குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பே நிறுவனம் எங்களை வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பஞ்சம் பிழைக்க எங்கள் மூதாதையர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து 95 ஆண்டுகளுக்கு முன் மாஞ்சோலையில் குடியேறினர். இதனால் எங்களுக்கென்று சொந்த நிலம், வீடு எங்கும் இல்லை. தற்போது 700 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். அவர்களின் மறுவாழ்விற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டாவை திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் வழங்க வேண்டும். அரசு வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கன்னியாகுமரி அரசு ரப்பர் கழகத்தில் வேலை வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் வேலை வாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மாஞ்சோலை நாலுமுக்கு எஸ்டேட் ஜான் கென்னடி, 'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின் தேயிலை தோட்டக் கழகம் (டான்டீ) நிர்வாகம் ஏற்று நடத்த உத்தரவிட வேண்டும்,' என மற்றொரு மனு தாக்கல் செய்தார்.ஜூன் 21 ல் நீதிபதிகள் அமர்வு: மாஞ்சோலையில் தற்போது எந்த நிலை உள்ளதோ அதேநிலை தொடர வேண்டும்.இவ்வாறு இடைக்கால உத்தரவிட்டனர்.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: அங்கு வசிப்போரின் கருத்தை பரிசீலிக்காமல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக 2018 ல் அரசு அறிவித்தது. விருப்ப ஓய்வில் செல்லுமாறு தொழிலாளர்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி நிறுவனம் கையெழுத்து பெற்றுள்ளது. குடிநீர், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விருப்ப ஓய்வு திட்டத்தில் தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை ரத்து செய்ய வேண்டும். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழும் இடத்திலேயே தலா 4 எக்டேர் நிலம் வழங்க வேண்டும். இதர பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இம்மனுக்களை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசு தரப்பு: அப்பகுதி முழுவதும் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனம், தொழிலாளர்கள் இடையிலான தனிப்பட்ட பிரச்னை. தொழிலாளர்களின் மறுவாழ்வு திட்டத்திற்கு சாத்தியக்கூறுகள் குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு அரசிடமிருந்து விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை.பி.பி.டி.சி.,நிறுவனம் தரப்பு: 576 தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு, பணிக்கொடை உள்ளிட்ட இதர பணப்பலன்கள் வழங்கப்படும். விருப்ப ஓய்வில் செல்ல யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. 25 சதவீத பணப்பலன்கள் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மீதி 75 சதவீத தொகையை வழங்கத் தயார். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: நிறுவனம் மீதம் 75 சதவீத தொகையை நாகர்கோவில் தொழிலாளர் உதவி கமிஷனரிடம்(தேயிலை தோட்டம் பயிரிடல்) ஒருவாரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு உரிமை கோரி விண்ணப்பிக்கும் தொழிலாளர்களின் உண்மைத் தன்மையை விசாரித்து தொகையை பட்டுவாடா செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு நிரந்தர மறுவாழ்வு அளிக்கும் திட்டம் குறித்து அரசின் நிலைப்பாட்டை ஜூலை 22 ல் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். தேயிலை தோட்டத்தைவிட்டு தொழிலாளர்களை நிறுவனம் வெளியேற்றக்கூடாது. இவ்வாறு இடைக்கால உத்தரவிட்டனர்.கிருஷ்ணசாமி கூறியதாவது: மறுவாழ்வு குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டது தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றி. இவ்விவகாரத்தில் தமிழக அரசு சுய கவுரவம் பார்க்கத் தேவையில்லை. அனைத்து தேயிலை தோட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தான் இருக்கின்றன. அரசு குறுகிய நோக்கில் பார்க்கக்கூடாது. இதற்காக டில்லிவரை ஜனநாயக ரீதியான போராட்டம் தொடரும். அடுத்தமுறை நீதிமன்ற அனுமதியுடன் நானே ஆஜராகி வாதங்களை முன்வைப்பேன். இவ்வாறு கூறினார்.