உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல்லாய் நினைத்தது புல்லாய் முளைத்தது

நெல்லாய் நினைத்தது புல்லாய் முளைத்தது

மதுரை: 'தனியார் கடையில் கோ 55 ரக நெல் விதையை வாங்கி விதைத்தேன். அனைத்தும் புல்லாய் முளைத்து ஏமாற்றி விட்டது' என்கிறார் செல்லம்பட்டி நரியம்பட்டியைச் சேர்ந்த விவசாயி பூமிநாதன்.அவர் கூறியதாவது: 3 ஆண்டுகளாக தனியார் கடையில் கோ 55 ரக நெல்லை வாங்கி 8 ஏக்கரில் விதைத்து அறுவடை செய்து வருகிறேன். இந்த கோடை காலத்திற்காக 80 கிலோ விதை வாங்கி ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் நேரடி நெல் விதைப்பு செய்தேன். ஆரம்பத்தில் அனைத்தும் நெல் போல் வளர்ந்ததால் களை போல் தெரியவில்லை. 85 நாட்கள் கடந்த நிலையில் நெற்கதிர் விடும் பருவத்தில் தான் அது புல் என தெரிகிறது. மேலும் நெற்பயிரை அமுக்கி விட்டதால் சேதம் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. கடைக்காரரிடம் கேட்ட போது என் வயலில் பிரச்னை இருக்கும் என்கிறார். மூன்றாண்டுகளாக இந்த விதையை விதைத்த போது எந்த பிரச்னையும் வந்ததில்லை. எனவே நெல் விதையிலேயே புல் விதை ஒட்டிக்கொண்டு இருந்திருக்க வேண்டும் என்றார். வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: வேளாண் விரிவாக்க மையங்களில் கோ 55 ரக நெல் விதை இருப்பு இல்லை. சான்று பெற்ற விதையாகவோ ஆதார விதையாகவோ வாங்கி விதைக்க வேண்டும். சில நேரங்களில் விவசாயிகள் உற்பத்தியாளர் விதைகளை நேரடியாக வாங்கி விதைக்கின்றனர். அப்போது இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. களை அதிகமாக இருக்கும் பட்சத்தில் முதலில் களைக்கொல்லி மருந்தும் பின்னர் இருமுறை கையால் களை எடுக்க வேண்டும். களைகள் முறையாக அகற்றப்பட்டிருந்தால் நெல்லை தாண்டி இவ்வளவு துாரம் புல் வளர்ந்திருக்காது. விதை ஆய்வாளர் மூலம் அந்த கடையிலிருந்து விதை மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்படும். மேலும் விவசாயிகள் விதை நெல் வாங்கும் போது அறுவடை முடியும் வரை சான்று அட்டை, உற்பத்தியாளர் அட்டையை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ