| ADDED : ஜூன் 14, 2024 05:16 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இல்ல விழா ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய இளைஞரின் கையில் காயம் ஏற்பட்டது.உசிலம்பட்டியில் மதுரை ரோடு திருமங்கலம் விலக்கு அருகே மண்டபத்தில் வேப்பனுாத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் இல்ல விழா நடந்தது. விழாவையொட்டி தாய்மாமன் சீர் கொண்டு செல்லும் ஊர்வலத்தில் முத்துப்பாண்டி 24, என்பவர் பட்டாசுகளை கொளுத்திப் போட்டுக் கொண்டு வந்தார். எதிர்பாராத விதமாக கையில் இருந்த பட்டாசு வெடித்ததில், அவரது வலது கை விரல்கள் சேதமடைந்தன. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடரும் விபத்துகள்
கடந்த ஜூன் 2 ல், வத்தலக்குண்டு ரோட்டில் நடந்த ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து 2 சிறுமிகள் உள்பட 8 பெண்கள் காயமடைந்தனர். ஜூன் 8 ல், கருமாத்துாரில் போலீஸ் டி.ஐ.ஜி., காரின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. தற்போது இளைஞரின் கையில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஊர்வலம் போன்று அதிகளவில் மக்கள் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு இன்றி பட்டாசு வெடிப்பதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.