ஆளில்லா 111 லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டன: உயர்நீதிமன்றத்தில் தகவல் உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : மதுரை தெற்கு ரயில்வே கோட்டத்தில் 111 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டுள்ளன என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரயில்வே தரப்பு தெரிவித்தது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே தைலாகுளம் தசரதபாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு:தைலாகுளம் வழியாக ரயில்வே பாதை செல்கிறது. அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணியின்போது ஏற்கனவே இருந்த ஆளில்லா லெவல்கிராசிங்கை மூடினர். பணி முடிந்துவிட்டது மீண் டும் திறக்கப்படாததால் கடந்து செல்வதில் மக்கள் சிரமப்படுகின்றனர். லெவல் கிராசிங்கை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் , எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை பொறியாளர் பிரவீனா ஆஜரானார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜ், ரயில்வே சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜராகி தாக்கல் செய்த பதில் மனு:ஆளில்லா லெவல் கிராசிங்குகளை மூட வேண்டும் என்பது தேசிய அளவிலான கொள்கை முடிவு. மாற்றாக அருகில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது. மதுரை தெற்கு ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 111 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் மூடப்பட்டுள்ளன. ரயில்களின் வேகம் அதிகரிப்பு, மக்களின் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டது. மனுதாரர் குறிப்பிடும் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.இதை பதிவு செய்த நீதிபதிகள்,'சுரங்கப்பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.