மதுரை விமான நிலையத்தில் 1.16 லட்சம் பயணிகள் வருகை அக்டோபரில் மட்டும்
அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்திற்கு அக்டோபரில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 613 பயணிகள் வந்து சென்றுள்ளனர். மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பைக்கும், துபாய், கொழும்பு, அபுதாபிக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியா பினாங்கிற்கு இரவு நேர விமான சேவை நடக்கிறது. அதனால் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விமான நிலையத்தில் பல்வேறு கட்டங்களாக விரிவாக்க பணிகள் நடக்கிறது. அக்டோபரில் மதுரை விமான நிலையத்தை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 613 பயணிகள் பயன்படுத்தி இருக்கின்றனர். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இரவு நேரங்களில் விமான சேவையை துவங்கினால் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும். அதற்கான பணிகள் நடக்கின்றன'' என்றனர்.