உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் விட வலியுறுத்தி மறியல் 180 விவசாயிகள், கட்சியினர் கைது

உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் விட வலியுறுத்தி மறியல் 180 விவசாயிகள், கட்சியினர் கைது

உசிலம்பட்டி: வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் 180 பேரை போலீசார் கைது செய்தனர். உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் நேற்று காலை மறியல் நடந்தது. அ.தி.மு.க., பா.பி., தே.மு.தி.க., நாம் தமிழர், அ.ம.மு.க., பா.ஜ., த.வெ.க., தென்னிந்திய, தமிழ்தேசிய பா.பி., வி.சி.க., கட்சியினர் பங்கேற்றனர். பா.பி., முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், 'கடந்தாண்டு கால்வாயில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இருந்தும் நீர்வளத்துறையினர் முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்தாண்டு வைகை அணையில் நீர்மட்டம் முழுக்கொள்ளவை எட்டி வருகிறது. எனவே தண்ணீர் திறக்கும்படி கலெக்டர் உட்பட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளோம். அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என்றார். தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., சந்திரசேகர், நீர்வளத்துறை உதவிப் பொறியாளர்கள் பாண்டியன், ஏங்கெல்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். 'வைகை, பெரியாறு பூர்வீக பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. கடந்த முறை இதே காலகட்டத்தில் தண்ணீர் திறந்தபோது, போதிய மழைப்பொழிவு இல்லாமல் 10 நாட்களுக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாமல் போனது. நமக்குரிய வடகிழக்கு பருவமழை காலமான நவம்பரில் தண்ணீர் திறந்தால்தான் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் கொடுக்க முடியும்' என தெரிவித்தனர்.இதை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்ட 180 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை, வத்தலக்குண்டு ரோடுகளில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை