வைகை வடகரை ரோடு 25 சதவீத பணிகள் முடிவு
மதுரை : மதுரை வைகை வடகரை பகுதியில் சமயநல்லுார் வரை அமையும் ரோடு பணிகள் 25 சதவீதம் முடிவடைந்துள்ளன.மதுரை - திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை நதியோரம் காமராஜர் பாலம் முதல் சமயநல்லுார் 4 வழிச்சாலை வரை 8 கி.மீ., ரோடு ரூ.175 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் 4 மாதங்களுக்கு முன் துவங்கியது. மதுரை நகருக்குள் உள்ளது போல, வைகை கரையோரம் தாங்குசுவருடன் அமையும் இந்த ரோடு 10 மீ., ரோடு, இருபுறமும் தலா 1.5 மீ., நடைபாதை என 13 மீ., அகலத்தில் இருவழிச் சாலையாக அமைக்கப்படுகிறது. இதனால் திண்டுக்கல் ரோட்டில் பரவை வரையான பகுதியில் போக்குவரத்து எளிதாகும். இந்த ரோட்டோரம் 3 ஆயிரம் மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர்.இந்த ரோடு பணியில் சுவர் எழுப்பிக் கொண்டே புதிய ரோட்டையும் உருவாக்கி வருகின்றனர். இதுவரை 25 சதவீத பணிகள் முடிந்துள்ளன. நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவிப்பொறியாளர் சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், ''மூன்று மாதங்களில் கரையோர சுவர் கட்டும் பணி முடிவடைந்து விடும். தொடர்ந்து ரோடு அமைக்கும் பணியை துரிதப்படுத்தி இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிடுவோம்'' என்றனர்.