தீபாவளி பட்டாசு வெடித்தபோது விபத்து; அரசு மருத்துவமனையில் 28 பேர் அனுமதி
மதுரை: தீபாவளி நாளில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்த விபத்துகளால் தீக்காயமடைந்த 28 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளியன்று (அக்.20) காலை 7:00 மணி முதல் நேற்று (அக்.21) காலை 7:00 மணி வரை பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்த ஒரு பெண் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இவர்களில் 25 பேர் தீவிர விபத்து பிரிவு, அறுவை சிகிச்சை, தீக்காயப் பிரிவு வார்டுகளில் சிகிச்சை பெறுகின்றனர். சிறுவனுக்கு விரல் நுனி துண்டாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 3 பேர் கண்மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு பார்வை பிரச்னை இல்லை. மற்றவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்றனர். அவசர கால சிகிச்சை மேலாண்மை குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமார், ஆர்.எம்.ஓ. முரளிதரன் கூறியதாவது: மதுரை அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைக்கான நோயாளிகள் சேர்க்கப்பட்டால்தான் பதட்டமின்றி சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் சுற்றியுள்ள 5 மாவட்ட அரசு மருத்துவமனை டீன்கள், 108 ஆம்புலன்ஸ் பிரதிநிதிகளுடன் முன்கூட்டியே ஆலோசனை நடத்தினோம். லேசான தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தோம். மேல் சிகிச்சைக்கு மட்டும் 3 பேர் மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் மதுரையில் பட்டாசு விபத்துகளால் காயமடைந்தோருக்கு தொய்வின்றி சிகிச்சை அளிக்க முடிந்தது. எட்டு பேருக்கு லேசான அறுவை சிகிச்சை, 13 பேருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்றனர்.