உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெங்களூரு கைதியிடம் ஆன்லைனில் பேசி போதைப்பொருள் வாங்கி விற்ற 4 பேர் கைது

பெங்களூரு கைதியிடம் ஆன்லைனில் பேசி போதைப்பொருள் வாங்கி விற்ற 4 பேர் கைது

மதுரை:பெங்களூரு சிறை கைதியிடம், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக பேசி, அவர் கூறிய நபரிடம் போதைப்பொருளை வாங்கி விற்று வந்த நான்கு பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.கோவையைச் சேர்ந்த அண்ணாமலை, 25, மதுரை கரிமேடு மேலஅண்ணாதோப்பு சகோதரர்கள் ராமர், 21, லட்சுமணன், 21, ஆனையூர் சூர்யபிரகாஷ், 24. இவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் மொபைல் போன் வாயிலாக நண்பர்களாகினர். இவர்கள் போதைப்பொருள் வழக்கில் கோவை சிறையில் இருந்தபோது, மதுரை பேச்சியம்மன் படித்துறை நவீன் நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மூலமாக பெங்களூரு தினேஷ், பூனையன் ஹரி, காக்காமுட்டை கார்த்திக் ஆகியோர் அறிமுகமாகினர்.இவர்களில் அண்ணாமலை உட்பட 4 பேர், கோவையில் இருந்து மதுரைக்கு பஸ்சில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விளாங்குடி பகுதியில் பஸ்சை நிறுத்தி சோதனையிட்டதில், 25 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. அண்ணாமலை, ராமர், லட்சுமணன், சூர்யபிரகாஷை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:நவீன் நாகராஜ் தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். அவரது ஆலோசனைப்படி பெங்களூரு தினேஷ் மூலமாக கஞ்சாவையும் மெத் ஆம்பெட்டமைனையும் வாங்கி வந்து நால்வரும் நண்பர்களுடன் சேர்ந்து தமிழகத்தில் விற்று வந்துள்ளனர்.ஒரு வாரத்திற்கு முன், சிறையில் இருந்து இன்ஸ்டாகிராம் மூலம் நவீனிடம் பேசி, பெங்களூரு தினேஷிடம் இருந்து கஞ்சா, மெத் ஆம்பெட்டமைனை பெற்று மதுரையில் விற்பதற்காக கோவையில் இருந்து பஸ் மூலமாக கொண்டு வந்தபோது கைது செய்யப்பட்டனர். மற்ற நால்வரையும் தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரவுடி வெள்ளை காளி கூட்டாளி

பெங்களூரு சிறையில் உள்ள நவீன் நாகராஜ், மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர். பிரபல ரவுடி வெள்ளை காளியின் கூட்டாளி. இவர் மதுரை தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியை பெங்களூரு ஹோட்டலில் வெள்ளை காளிக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிய வழக்கில் கைதானவர். அந்த வழக்கில்தான் தற்போது சிறையில் உள்ளார்.போனில் பேச முடியாது என்பதால் இன்ஸ்டாகிராம் மூலம் யார் யாருக்கு கஞ்சா, போதைப்பொருள் சப்ளை செய்ய வேண்டும் என கைதான அண்ணாமலைக்கு வழிகாட்டி வந்துள்ளார். கைதானவர்கள் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை