உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டம்

நுாறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டம்

திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியம் டி.புதுப்பட்டியில் நடந்த திருவிழாவில் அன்னதானம் பெறச்சென்ற நுாறுநாள் வேலைதிட்ட பணியாளர்களை கண்டித்த ஊராட்சி செயலருக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.புதுப்பட்டியில் நேற்று காலை 100 நாள் வேலை திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்தனர் . மதியம் அந்த பகுதியில் நடந்த திருவிழாவில் அன்னதானம் சாப்பிடுவதற்காக அனைவரும் சென்று விட்டனர். அங்கு வந்த ஊராட்சி செயலாளர் தாமரைச்செல்வி பணியிடத்தில் யாரும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பணித்தள பொறுப்பாளரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அது 'சுவிட்ச் ஆப்'பில் இருந்தது. இதுகுறித்து அவர் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இந்நிலையில் உணவு உண்டபின் வந்த தொழிலாளர்களிடம் இதுகுறித்து கேட்டார். அவர்களிடம், 'வேலை நேரத்தில் சொல்லாமல் சென்றதால் இன்று விடுமுறை அளிக்கப்படும்' என தெரிவித்தார். இதில் ஆத்திரமடைந்த அப்பணியாளர்கள், திருமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர்.இன்று பணியாற்றிய நாளை விடுமுறையாக கருதாமல், பணிநாளாக கருத வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், ''மீண்டும் இது போன்ற தவறு நடக்க கூடாது'' எனக் கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி