52 இனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஏலம் விடப்படவில்லை
மாநகராட்சியின் வருவாய் இனங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விடப்படுகிறது. இதற்காக வைப்பு தொகை, வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனையூர் வெள்ளிக்கிழமை சந்தை, செல்லுார் கழிப்பறை, ஜம்புரோபுரம் தினசரி சந்தை, மாட்டுத்தாவணி இருசக்கர வாகனம், ஸ்டோர் ரூம், வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட 52 இனங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஏலம் விடப்படவில்லை. இதற்கான வைப்பு தொகை அதிகம் என ஏலத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.இதனால் 4 முறை ஆன்லைன் ஏலம் விடப்பட்டும் 43 இனங்களை யாரும் எடுக்க முன்வரவில்லை. இதனால் அந்த இனங்களுக்கான வைப்புத் தொகையை 50 சதவீதம் மாநகராட்சி குறைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் பின்னணியில் 'சிண்டிகேட் அரசியல்' உள்ளது என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.அவர்கள் கூறியதாவது: இதுபோல் ஏலம் எடுக்கப்படாத இனங்களில் கட்டணத்தை மாநகராட்சியே நேரடியாக வசூலிக்கும். அப்பகுதி ஆளுங்கட்சி பிரமுகர்கள் கூட்டு சேர்ந்து அந்த இனங்களில் விதிமீறி அதிக வசூலில் ஈடுபடுகின்றனர். ஆனால் ரசீதில் குறிப்பிட்ட தொகையை மட்டும் மாநகராட்சிக்கு ஒப்படைக்கும் 'வசூல் அரசியல்' காலம்காலமாக நடக்கிறது. இதன் மூலம் ஆளுங்கட்சி பிரமுகர்களும், அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் மாநகராட்சி அலுவலர்களும் வளம் கொழிக்கின்றனர்.உதாரணமாக மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் இருசக்கர வாகன காப்பகத்தில் 12 மணி நேரத்திற்கு ரூ.8 என்பது மாநகராட்சி நிர்ணயித்த தொகை. ஆனால் 12 மணிநேரத்திற்கு கூடுதலான நேரத்திற்கான தொகையை ரசீது போடாமல் கணக்கிற்கு கொண்டு வருவதில்லை. இத்தொகையை அலுவலர்களும், அரசியல் புள்ளிகளும் பங்கிட்டனர். இந்த முறைகேடுக்கு கமிஷனர் சித்ரா முற்றுப்புள்ளி வைத்தார்.ஆனாலும் 'சிண்டிகேட்' அமைத்து 43 இனங்களுக்கு இதுவரை ஏலம் விடமுடியாத சூழலை ஏற்படுத்தி, 50 சதவீதம் வைப்புத் தொகையை குறைக்க செய்ததும் அரசியல் பின்னணியே. இதிலும் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு பங்குண்டு. இது மாநகராட்சிக்கு தான் இழப்பு என்றனர்.