உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தற்போதைய 72 சதவீதம் தொழில்நுட்ப திறன்கள் 2030ல் காலாவதியாகி விடும்; கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேச்சு

தற்போதைய 72 சதவீதம் தொழில்நுட்ப திறன்கள் 2030ல் காலாவதியாகி விடும்; கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேச்சு

எதிர்கால தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:தற்போது உலக அளவில் பேசப்படும் ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் மிக குறைவு தான். 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை தாண்டி தற்போது 'ஓ.ஐ.,' (ஆர்க்கனைஸ்டு இன்டலிஜென்ட்) துவங்கிவிட்டது. இதுபோல் 'டேட்டா சயின்ஸ்' தற்போது 'சிந்தட்டிக் டேட்டா சயின்ஸ்' ஆக முன்னேறிவிட்டது. தற்போதை 'கோடிங்கிங்'ல் 80 சதவீதம் மாற்றம் வரப்போகிறது. 70 சதவீதம் வேலை வாய்ப்புகள் டிஜிட்டல் மயமாக போகின்றன. இவ்வகையில், தற்போது நம்மிடையே உள்ள 72 சதவீதம் தொழில்நுட்ப திறன்கள் வரும் 2030ல் காலாவதியாகிவிடும். மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை நாம் சந்திக்க உள்ளோம்.தற்போது பொறியியல் படிப்புகளை தேர்வு செய்து, படித்து முடித்து வெளியே வரும் போது எவ்வகை தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கும் என்பதை அறிந்து படிப்புகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட உள்ளது. அதுபோல் ஹெல்த் கேர் வெர்ஜூவல் ரியாலிட்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது நமது இதயம் துடிப்பதை நாமே அறியலாம், மரணம் வந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர வைப்பது தான் இந்த வெர்ஜூவல் ரியாலிட்டி தொழில் நுட்பம். அதுபோல் 'கியூ.ஆர்., கோடுக்கு பதில் 'ஐ.ஆர்.,' கோடு தொழில்நுட்பத்துக்கு வந்துவிட்டோம். அதாவது ஏ.டி.எம்., உள்ளிட்ட பண வர்த்தக கார்டுகள் இல்லாமல் தொடுதல் உணர்வு மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் தற்போது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்கியூரிட்டி துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது. பொறியியலில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. என்.ஐ.ஆர்.எப்., ரேங்கிங் பெற்ற நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மருத்துவத்தை பொறுத்தவரை நீட் தேர்வில் மதிப்பெண் கிடைக்கவில்லை என்றால் கால்நடை மருத்துவம், மீன் வளர்ப்புத் துறை படிப்புகளை தேர்வு செய்யுங்கள். ஏராளமான மருத்துவ இணை படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.

வாய்ப்புகள் குறையாத வணிகவியல் படிப்புகள்

'வணிகவியல் மேலாண்மை படிப்புகள்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியை பத்மாவதி பேசியதாவது:எந்த துறையிலும் ஏற்றம் இறக்கம் வந்தாலும் வணிகவியல் துறையில் வாய்ப்புகள் எப்போதுமே குறையாது. படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும், சுயதொழில் துவங்க வேண்டும் என்றால் வணிகவியல் படிப்புகளை தேர்வு செய்யலாம். பி.காம்., பி.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளும், சி.ஏ., சி.எஸ். சி.எம்.ஏ., உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. பட்டப்படிப்பு முடித்தால் நேரடியாக இன்டர்மீடியேட் தேர்வு எழுதலாம். சி.எஸ்., கார்ப்பரேட் செக்கரட்டரிஷிப் படித்தால் கம்பெனிகளுக்கு செகரட்டரியாக பணியாற்றலாம். ரூ.10 கோடி வர்த்தகம் உள்ள நிறுவனங்கள் கட்டாயம் ஆடிட்டர் வைத்திருக்க வேண்டும் என்பது விதி. அரசு நிறுவனங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், நிதி ஆலோசகர், இன்சூரன்ஸ் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எந்த படிப்பையும் குறைவானதாக நினைக்கக்கூடாது. கல்லுாரிகளை தேர்வு செய்வதில் அதிக கவனம் வேண்டும்.

அதிக சம்பளம் பெற்றுத்தரும் வணிக கப்பல்துறை படிப்புகள்

'வணிக கப்பல்துறை' தொடர்பாக ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் திருமூர்த்தி காமாட்சி பேசியதாவது:கடல்சார் படிப்புகள் குறித்து தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் உள்ள படிப்புகள் உள்ளன. குறிப்பாக வணிக கப்பல் துறை, கடல் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. வணிக ரீதியாக பல நாடுகளுக்கான தொடர்பை ஏற்படுத்துகிறது. உலகில் கடல் வழியாக தான் 90 சதவீதம் சரக்கு போக்குவரத்து நடக்கிறது. 1.50 லட்சம் கப்பல்கள் உள்ளன. 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கண்டெய்னர்களை ஒரு கப்பலில் கொண்டு செல்ல முடியும். காய்கறிகள், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்ல வணிகப் கப்பல் துறையின் பங்கு மகத்தானது. கொரோனா பேரிடர் காலத்தில் இவ்வகை போக்குவரத்து உலகளவில் கை கொடுத்தது. இத்துறையில் நேவிகேஷன், இன்ஜின் கேட்டரிங் என்ற மூன்று துறைகளில் வேலைவாய்புகள் உள்ளன. அதிக சம்பளம் பெறும் படிப்புகள் இவை. எப்போதும் வேலை வாய்ப்புகள் உள்ள துறை. ஆங்கில புலமை அவசியம். பி.டெக்., மரைன் இன்ஜி., 3 ஆண்டுகள் நாட்டிக்கல் சயின்ஸ், டிப்ளமோ இன் நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !