சாத்தையாறில் பாலம் தேவை
பாலமேடு: பாலமேடு அருகே சாத்தையாறு ஓடையில் காட்டாற்று வெள்ளத்தை பொதுமக்கள் கயிறு கட்டி கடக்கும் அபாய நிலை தொடர்கிறது.அலங்காநல்லுார் ஒன்றியம் தெத்துார் ஊராட்சியில் கெங்கமுத்துார் கிராமம் உள்ளது. இங்கு சாத்தையாறு ஓடையை கடந்து 50 குடியிருப்புகள் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மல்லிகை, கொய்யா, பப்பாளி உள்ளிட்ட சாகுபடியை செய்கின்றனர். இந்த ஓடையை கடக்க பாலம் இல்லை. இதனால் மழை நேரங்களில் இப்பகுதியினர் விளை பொருட்களை கொண்டு செல்லவும், மாணவர்கள் தினமும் பள்ளி சென்று திரும்பவும் மிகவும் சிரமப்படுகின்றனர்.காட்டாற்றில் வெள்ளம்எப்போது வரும் என யாராலும் கூற முடியாது. இப்பகுதியில் மழை இல்லாதநிலையில், வெகுதொலைவில் உள்ள திண்டுக்கல் மலைப்பகுதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்தால்கூட திடீரென வெள்ளமும், அதில் மரங்களும் அடித்து வரப்படும். இதனால் ஓடையை கடக்கும் போது அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்புஉள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த சூர்யா, சின்ன அழகி கூறியதாவது: சில மாதங்களுக்கு முன் பெரிய சிமென்ட் குழாய்களை பதித்து மண்பாலம் அமைத்திருந்தோம். தற்போதைய தொடர் மழையில் பாலம், குழாய்கள் அடித்து செல்லப்பட்டன. தினமும் சந்தைக்கு செல்ல விளை பொருட்கள், கால்நடைகளுக்கான தீவனம், பால் கேன் சுமையுடன் கயிறுகளை பிடித்து கொண்டே அச்சத்துடன் ஓடையைக் கடக்கிறோம். வெள்ளம் அதிகமாக இருந்தால் வனப்பகுதி, சாத்தையாறு அணை ஒற்றையடி பாதை வழியாக 5 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக பாலம் கேட்டும் அது நிறைவேறவில்லை என்றனர்.சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன் கூறுகையில், ''இது போன்று 4 ஊர்களில் ஓடைகளில் பாலங்கள் தேவை என்ற கோரிக்கை வைத்துள்ளனர். சேந்தமங்கலத்தில் கட்டி திறக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களிலும் விரைவில் கட்டப்படும் என்றார்.