ஒரே இடத்தில் உற்ஸவரும், சண்முகரும் திருப்பரங்குன்றத்தில் அரிதான தரிசனம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்களுக்காக விசாக கொறடு மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர், வள்ளி, தெய்வானையை எழுந்தருளச் செய்துள்ளனர்.கோயில் சண்முகர் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் அருள் பாலிப்பார். உற்ஸவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை அருள் பாலிப்பர்.ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகத்தன்று கம்பத்தடி மண்டபத்திலுள்ள விசாக கொறடு மண்டபத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானை எழுந்தருளச் செய்யப்பட்டு பக்தர்கள் கொண்டு வரும் பால் அபிஷேகம் செய்யப்படும்.நவராத்திரி தினங்களில் விசாக கொறடு மண்டபத்தில் கோவர்த்தனாம்பிகை அம்பாள், தினமும் ஒரு அலங்காரத்தில் அருள் பாலிப்பார். கொடியேற்ற திருவிழா காலங்கள், சஷ்டி திருவிழா நாட்களில் விசாக கொறடு மண்டபத்தில் யாக சாலை பூஜை நடைபெறும்.தற்போது உற்ஸவர், சண்முகர் சன்னதிகளில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. அதனால் விசாக கொறடு மண்டபத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர், வள்ளி, தெய்வானையை எழுந்தருள செய்துள்ளனர். திருப்பணிகள் முடியும் வரை சுவாமிகள் விசாக கொறடு மண்டபத்தில் அருள் பாலிப்பர். அரிதான இந்தக் காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசிக்கின்றனர்.