உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சட்டசபை தொகுதி வாரியாக பயிற்சி அளிப்போர் பட்டியலில் குளறுபடி; பா.ஜ., அறிவிப்பால் நெளியும் நிர்வாகிகள்

சட்டசபை தொகுதி வாரியாக பயிற்சி அளிப்போர் பட்டியலில் குளறுபடி; பா.ஜ., அறிவிப்பால் நெளியும் நிர்வாகிகள்

மதுரை: தமிழக பா.ஜ., சார்பில் ஓட்டுச்சாவடி நிலைய முகவர்களாக (பி.எல்.ஏ.,2) பணியாற்றுவோருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான வகுப்புகளை நடத்த மாநில தலைமை முடிவு செய்தது. இதற்காக தொகுதி வாரியாக பயிற்சியாளர்களை அறிவித்துள்ளது. இப்பயிற்சி வகுப்பு இரு அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வில் தொகுதியின் அமைப்பாளர் அல்லது இணை அமைப்பாளரில் ஒருவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்குவார். இரண்டாவது அமர்வில் தொகுதி பொறுப்பாளரே ஓட்டுச்சாவடி நிலைய முகவர்கள் (பி.எல்.ஏ.2) பணிகள் குறித்து பயிற்சி அளிப்பர் என அறிவித்தனர். அதன்படி அறிவித்த பயிற்சியாளர் பட்டியலில் தொகுதியின் பொறுப்பாளர் பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொகுதி பொறுப்பாளர்களாக மாநில, மாவட்ட மூத்த நிர்வாகிகளே உள்ளனர். அவர்கள்தான் 2வது அமர்வில் பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களின் பெயர் இல்லாததால் கட்சியினரே குழம்பி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் எப்படி உதாரணமாக மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளராக மாநில பொது செயலாளர் ராம சீனிவாசன் உள்ளார். அவர்தான் அத்தொகுதியில் 2வது அமர்வில் பயிற்சி அளிக்க வேண்டும். மாறாக அத்தொகுதி அமைப்பாளர் ஏ.ஆர். மஹாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அமைப்பாளரான அவர் காலை அமர்விலும் பேசுவார் என உள்ளது. இதனால் ராமசீனிவாசன் புறக்கணிக்கப்பட்டாரோ என கட்சியினர் கருதுகின்றனர். அதேபோன்று மதுரை வடக்கு தொகுதியில் பொறுப்பாளரான மாநில செயற்குழு கே.கே.ஸ்ரீனிவாசனுக்குப் பதிலாக நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தியை அறிவித்துள்ளனர். மத்திய தொகுதியில் பொறுப்பாளரான மாநில செயலாளர் கதலிநரசிங்க பெருமாளுக்குப் பதில் சசிராமன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலுாரில் பொறுப்பாளர் சிவபாலனுக்குப் பதில் மாவட்ட தலைவர் ராஜசிம்மன், திருமங்கலத்தில் மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினத்திற்குப் பதில் தொகுதி அமைப்பாளர் சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 6ல் குழப்பம் உள்ளது. இதே நிலைதான் மாநிலம் முழுவதும் உள்ளது. இதனால், தொகுதி பொறுப்பாளர்களாக உள்ள மாநில நிர்வாகிகள் பலரும், தாங்கள் மாவட்ட நிர்வாகிகளைவிட தகுதியற்றவர்களா என்று புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ