அஜித்குமார் கொலை வழக்கு அக்.17க்கு ஒத்திவைப்பு
மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை முதன்மை மாவட்ட நீதிமன்றம் அக்.,17க்கு ஒத்திவைத்தது. மடப்புரம் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா வந்த காரில் இருந்த நகை திருடுபோனது. இதனால் அவர் திருப்புவனம் போலீசில் புகாரளித்தார். அதுதொடர்பாக கோயில் காவலாளியான அஜித்குமாரை ஜூன் 27ல் விசாரணை என்ற பெயரில் தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் (சி.ஜெ.எம்.,) நீதிமன்றத்தில், ஆன்லைன் மூலம் முதற்கட்ட இறுதி அறிக்கையை ஆக., 20ல் தாக்கல் செய்தது. வழக்கில் கைதான போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன், வழக்கில் சேர்க்கப்பட்ட டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு செப்.,20ல் இறுதி அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது. விசாரணையை மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி அக்.,6க்கு நீதிபதி செல்வபாண்டி ஒத்திவைத்தார். இந்நிலையில் 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.ஜோசப் ஜாய் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 'அலைபேசி அழைப்புகள் தொடர்பான ஆவணங்கள் டில்லி, ஐதராபாத் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளன. அதன் மீது கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசத்திற்குள் விசாரணையை முடித்து, இறுதி குற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது' என சி.பி.ஐ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அக்., 17ல் வழக்கில் சம்மந்தப்பட்ட 6 பேரும் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.