பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் 108 ஆம்புலன்ஸ் தொ.மு.ச., போர்க்கொடி
மதுரை : ''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பொது மேடையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என'' 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் தெரிவித்தனர். வேலுார் அணைக்கட்டு பகுதியில் எழுச்சி பயணத்தில் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது இடையூறாக '108' ஆம்புலன்ஸ் வந்ததாக கூறி கண்டித்தார். கட்சி தொண்டர்கள் டிரைவரின் சட்டையைப் பிடித்து இழுத்து அடையாள அட்டையை பறிக்க முயன்றனர். இச்செயலுக்கும் பழனிசாமியின் பேச்சுக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து மதுரை எஸ்.பி.,அரவிந்திடம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் புகார் மனு அளித்தனர். மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி, துணைச்செயலாளர் எழிலரசி, மாவட்ட செயலாளர் வாசுகி கூறியதாவது: மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள எங்களை தவறாக பழனிசாமி சித்தரிக்க முயல்கிறார். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான நாங்கள் மக்களுக்காக இரவு பகல் பார்க்காமல் பணி செய்கிறோம். நோயாளியை அழைத்து வருவதற்கு முன்பாகவும் அழைத்து வரும் போதும் சைரன் ஒலிக்கவிடுவது தான் மருத்துவ விதிமுறை. பழனிசாமியின் மிரட்டல் பேச்சு அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும், மருத்துவ உதவியாளர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக பொதுமேடையில் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் புகார் மனு கொடுத்து வருகிறோம் என்றனர்.