| ADDED : பிப் 10, 2024 05:18 AM
மதுரை: மதுரை அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால் தலைமையாசிரியர்கள் தத்தளிப்பதாக புகார் எழுந்துள்ளது.மாவட்டத்தில் தொடக்க, நடு, உயர், மேல்நிலை பள்ளிகளில் 2023-2024ல் ஆண்டு விழாக்கள் நடத்துவதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி 250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளிக்கு ரூ.4 ஆயிரம், 500 மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.8 ஆயிரம், 800 மாணவர் கொண்ட பள்ளிக்கு ரூ.12 ஆயிரம், 2 ஆயிரத்திற்கு மேல் மாணவர் உள்ள பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.ஆனால் இந்தாண்டுக்கான விழாவை இன்று (பிப்.10க்குள்) முடிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் பெயரளவில் விழாக்களை முடித்துள்ளனர். அரசு ஒதுக்கிய நிதி பள்ளிகளுக்கு சென்றடையாததால் தலைமையாசிரியர்கள் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.தலைமையாசிரியர்கள் கூறியதாவது: உரிய நேரத்தில் அறிவுறுத்தாமல் பிப்.10க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பிப்.6ம் தேதி தெரிவிக்கின்றனர். நான்கு நாட்களுக்குள் எவ்வாறு நடத்த முடியும். பிப்.12ல் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வு துவங்குவதால் நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால் பல பள்ளிகளில் கண்துடைப்பாக விழாவை நடத்தி முடித்துள்ளனர். மேலும் பல பள்ளிகளில் விழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஒதுக்கிய நிதியும் பள்ளிக்கு வந்து சேரவில்லை. பொதுத் தேர்வால் ஏற்கனவே பிஸியாக உள்ள நேரத்தில் ஆண்டுவிழாவை நடத்தும் நெருக்கடியால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.