அறிவிப்போடு நிற்கும் குறுவைத்தொகுப்பு மானியம்
மதுரை: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த குறுவைத்தொகுப்பு மானியம் பிற மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என மார்ச் 15 வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டும் இதுவரை அரசாணை வெளியிடாததால் மானியம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை.தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலுார், புதுக்கோட்டை, கடலுார் மாவட்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் காவிரியில் தண்ணீர் திறக்கும் போது கோடை சாகுபடிக்கான குறுவைத்தொகுப்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.5000 வரையிலான உரம், நெல், சணப்பு அல்லது தக்கைப்பூண்டு பசுந்தாள் உர விதைகள் வழங்கப்படுகிறது. பிற மாவட்ட விவசாயிகளும் தொடர் கோரிக்கை வைத்தனர். பிரதான பயிராக கோடையில் நெல் சாகுபடி செய்யும் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு குறுவைத்தொகை மானியம் வழங்கப்படும் என இந்தாண்டு வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் முதல் ஜூலை வரை தான் குறுவைக்கான காலகட்டம். ஏற்கனவே ஒரு மாதம் கடந்த நிலையில் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மானியத்தை எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.அவர்கள் கூறியதாவது: நெல் விதைகள் நாற்று நடுவதற்கு முன்பே சணப்பு அல்லது தக்கைப்பூண்டு பசுந்தாள் விதைகளை விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழவேண்டும். நாற்று நட்ட பின் பயோ பெர்டிலைசர், எம்.என். மிக்சர் உரங்கள் வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கான நெல் விதைகள் தரவேண்டும். இவை அனைத்தையும் மானியமாக வழங்கும் போது ஏக்கருக்கு ரூ.5000 மதிப்பிலான உற்பத்திச் செலவு எங்களுக்கு குறையும். வேளாண் பட்ஜெட் அறிவித்த உடனேயே நெல், பசுந்தாள் விதைகளை வழங்கியிருக்க வேண்டும். இன்னும் தாமதம் செய்தால் குறுவை சீசன் முடிந்து விடும். அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் ஆரம்பித்து விட்டால் திட்டமிட்ட படி டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு குறுவைத்தொகுப்பு மானியம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்றனர்.