உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயணிகளை சுத்துல விடும் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்: போக்குவரத்தில் தொல்லை; இரவில் பாதுகாப்பில்லை

பயணிகளை சுத்துல விடும் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்: போக்குவரத்தில் தொல்லை; இரவில் பாதுகாப்பில்லை

மதுரை, : மதுரையில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் துவங்கியுள்ள மேம்பாட்டு பணிகள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் தவிக்கின்றனர். இரவில் விளக்குகள் இல்லாததால் வழிப்பறி முயற்சி நடக்கிறது.கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தேனி மாவட்டங்களில் இருந்து மதுரை வரும் புறநகர், தனியார் பஸ்கள், டவுன் பஸ்கள் என நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட பஸ்கள் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்துசெல்கின்றன. இப்பகுதியில் ரோடு, பஸ் ஸ்டாண்ட் முன்பு என அனைத்து பகுதியிலும் தாராளமாக ஆக்கிரமிப்புக்கள் காரணமாகவும், பஸ் ஸ்டாண்ட் முன் பகுதி ரோட்டில் தடுப்புச்சுவர் எழுப்பியுள்ளதாலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இப்பகுதியை ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.இந்நிலையில் ரூ.1.07 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி துவங்கியுள்ளது. இதில் பஸ் ஸ்டாண்ட் உட்புறம் தரையில் ஏற்கனவே உள்ள பேவர் பிளாக் கற்களை அகற்றி புதிய கற்கள் பதிக்கும் பணிகள் நடக்கின்றன. மேலும் கழிப்பறை, பயணிகள் நிற்கும் இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகள் துவங்கியுள்ளன.இதனால் மேம்பாட்டுப் பணிகள் முடியும் வரை பஸ்கள் வைகை ஆற்றுப்பாலம் ரோடுகள், ஜல்லிக்கட்டு ரவுண்டானா பகுதிகளில் நிறுத்த மாநகராட்சி இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. ஆனால் அப்பகுதியில் போதிய வசதிகள் இல்லை என பயணிகள் புலம்புகின்றனர்.பயணிகள் கூறியதாவது:பிப்., 9 வரை பஸ்கள் வெளியே நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப வசதிகள் இல்லை. இரவில் எந்த பஸ் எங்கே நிறுத்தப்பட்டுள்ளது என தெரியாத அளவிற்கு இருட்டாக உள்ளது. போதிய விளக்கு வசதி இல்லை. பஸ்களை கண்டுபிடித்து ஏறுவதற்குள் படாதபாடு படவேண்டியுள்ளது. இரவில் சிலர் நகைபறிக்க முயற்சித்தனர். இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு கூறுகையில் பஸ் ஸ்டாண்ட் பணிகளை தாமதம் ஏற்படுத்தாமல் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ