| ADDED : நவ 09, 2025 06:16 AM
மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்களிடம் நுாதன முறையில் மோசடி செய்த ஏஜன்ட் கைதானார். நியோமேக்ஸ் புராப்பர்ட்டீஸ் தனியார் நிதி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிந்துள்ளனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை புகார் கொடுக்கவிடாமல் இயக்குனர்கள், ஏஜன்ட்கள் தடுத்தனர். புதிதாக சுப்ரீம் எனர்ஜி பெடரேஷன், சிக்மா பெயர்களில் தொழில் துவங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் இடத்தை பதிவு செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அசல் ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். பிரீமியம் வில்லா பிளாட் என்ற பெயரிலான வங்கி கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் ஏமாற்றி மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு தென்மண்டல எஸ்.பி., சரவணகுமார், டி.எஸ்.பி., இமானுவேல் ராஜ்குமார் விசாரிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் நுாதன மோசடி செய்த திருச்சி மாவட்டம் காட்டூர் ஏஜன்ட் முத்துக்குமரன் 43, ஐ கைது செய்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், 4/425ஏ, சங்கரபாண்டியன் நகர், பார்க் டவுன், தபால் தந்தி நகர் விரிவாக்கம், மதுரையில் நேரில் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம். 0452 - 2642 161ல் தொடர்பு கொள்ளலாம்.